மருத்துவர் தகுதித்தேர்வில் பெயில் ஆனாலும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் டாக்டர் குடும்பம்: வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்கின்றனர்

புதுடெல்லி: வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு வந்த அண்ணன், தங்கை, தம்பி தகுதித் தேர்வில் பெயில் ஆனதால் கன்சன்டன்சி நிறுவனம் துவங்கினர். இன்று வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்க செல்லும் தேர்வர்களுக்கான ஆலோசகர்களாக மாறிய அவர்கள் ஆண்டுக்கு ரூ. 4 கோடி சம்பாதிக்கின்றனர். பீகார் மாநிலம் சிவானை சேர்ந்த மிருணாள் ஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2012ல் மருத்துவம் படிப்பதற்காக சீனாவுக்கு சென்றார். ஒரு ஆண்டுக்கு பின் அவருடைய சகோதரி எம்பிபிஎஸ் பயில போலந்து சென்றார்.

2 வருடங்களுக்கு பின் அவர்களது கடைசி தம்பியும் டாக்டர் படிப்புக்காக ஜார்ஜியா சென்றார். இவர்கள் 3 பேரும் வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்து விட்டனர். ஆனால், இந்தியாவில் மருத்துவராகப் பயிற்சி பெறுவதற்கான உரிமத்தைப் பெறுவதற்கு கட்டாயமான சோதனையான வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தகுதி தேர்வில்(எப்எம்ஜி) 3 பேரும் பலமுறை தோல்வியடைந்தனர். டாக்டராக பயிற்சி பெறுவதற்கான உரிமம் பெறத் தவறியதால், மிருணாள் ஜாவும், அவரது தங்கை மற்றும் தம்பியும் எம்பிபிஎஸ் தேர்வர்களுக்கான ஆலோசகர்களாக(கன்சல்டன்ட்) மாறியுள்ளனர்.

வெளிநாட்டு பல்கலைகழகங்களில் படித்து அங்கு உள்ள இடம் மற்றும் பல்கலைகழகத்தின் அதிகாரிகளை அவர்களுக்கு தெரியும். அதை பயன்படுத்தி வெளிநாட்டில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்களுக்கு ஆலோசனை மையத்தை நடத்தி வருகின்றனர். ஒரு மாணவர் சேர்க்கைக்கு ரூ.41 ஆயிரம் முதல் ரூ.58 ஆயிரம் வரை அவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் கமிஷன் தருகிறது.

இந்த ஆண்டில் 3 பேரும் சேர்ந்து ரூ.4 கோடி வருவாய் ஈட்டியுள்ளனர். இது குறித்து மிருணாள் கூறுகையில்,‘‘ மருத்துவ தகுதி தேர்வில் வெற்றி பெறுவோமா என்பது எங்களுக்கு தெரியாது.ஆனால் படிப்புக்காக பல லட்சம் செலவழித்து விட்டு வீட்டில் சும்மா இருக்க முடியாது. அதனால் தான் இந்த கன்சல்டன்சியை நடத்தி வருகிறோம். எங்கள் சொந்த ஊரில் மருத்துவமனை நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

Related posts

புதிய விண்வெளி கொள்கையை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் புதிய குற்றவியல் சட்டத்தின்படி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு