வரம்பு மீறல் கூடாது


செ ன்னை அசோக் நகரில் உள்ள ஒரு அரசு பள்ளி விழாவில் பங்கேற்ற தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், தன்னை உணர்தல் மற்றும் ஆன்மீக தேடல் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மாணவ, மாணவிகளின் கண்களை மூடச்சொல்லி பல்வேறு மூடநம்பிக்கை கருத்துகளை பேசியுள்ளார் இைத அங்கேயே ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார். அவரிடம் மகாவிஷ்ணு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சையாக பேசும் நபர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்போம். இது, தமிழ்நாடு முழுக்க அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும்’’ என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, தமிழ்நாடு பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், “தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி.” என்று குறிப்பிட்டுள்ளார். பள்ளிக்கூடம் என்பது சில பகுதிகளை மட்டுமே அறிந்துகொள்ளும் புத்தக படிப்போடு நின்றுவிடும் இடம் இல்லை. அதற்கும் மேலான சமூக உணர்வுகள், பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் இவற்றை அறிந்துகொள்ளும் இடம். பல்வேறு சமூகத்தில் இருந்து வரும் மாணவ செல்வங்கள் ஒற்றுமையாக வாழ, ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருக்கும் மனநிலையை வளர்க்க, குழு உணர்வுகளை வளர்த்தெடுக்க, ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை வளர, வெற்றி-தோல்வி என்ற விஷயங்களை சமமாக எடுத்துக்கொண்டு வாழ…

என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய நமது மாநில அரசின் பாடத்திட்டத்தில் அத்தனை சிறப்பம்சங்களும் உள்ளன. எனவே, போதனை என்ற பெயரில் வேறு யாரும் உள்ளே புகுந்து, வகுப்பு எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. எதிர்கால சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலை கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களால் மட்டுமே எடுத்துக்கூற முடியும். அதற்கு தேவையான புத்தாக்க பயிற்சி மற்றும் சமூக கல்வி, பள்ளிக்கல்வி துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலத்தில், இதுபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும்போது, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியமாகிறது. பள்ளி வளாகத்தில் வரம்பு மீறல் எக்காரணம் கொண்டும் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது அவர்களது முக்கியமான பொறுப்பு.

வருங்கால நற்குடிமக்களை உருவாக்கும் இடமே பள்ளிக்கூடம். அங்கு, விஷம் கலக்க, ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது. மாணவர்களிடையே ஈகை மனப்பான்மையினை உருவாக்குவதற்கும், மாணவர்கள் அன்புடனும், ஆதரவுடனும் கொடுத்து உதவும் மனப்பாங்குடன் சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் கைகோர்த்து பரிசுகளையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதற்கும், ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும் அக்.2 முதல் 8ம் தேதி வரை ‘மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்‘ நிகழ்ச்சி அனைத்து பள்ளிகளிலும் நடத்த தமிழ்நாடு அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற நற்பண்புகள் மட்டுமே பள்ளிகளில் விதைக்கப்பட வேண்டும்.

Related posts

இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை கூடுதலாக உள்ளது: வங்கதேச கேப்டன் பேட்டி

வடகிழக்கு பருவமழை: சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டம்

சென்னையில் குமரகுருபரன் தலைமையில் 2025ம் ஆண்டிற்கான வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம்..!!