திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை ஆஜர்: ஆகஸ்ட் 24ல் மீண்டும் நேரில் ஆஜராக மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் உத்தரவு

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த், ஆகஸ்ட் 24ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ம் தேதி உரிய ஆதாரங்கள் இல்லாமல் திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். அப்போது திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக தலைவருமான டி.ஆர்.பாலுவின் சொத்துப்பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு என்மீது கூறும் அவதூறு குற்றச்சாட்டுக்கு 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அண்ணாமலை மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடருவேன் என்று கூறியிருந்தார்.

ஆனால், அண்ணாமலை மன்னிப்பு கேட்காததால், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உண்மைக்கு புறம்பாக சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை மீது, சைதாப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், நான் கடந்த 1957ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்.பி.யாகவும், ஒன்றிய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். கட்சியிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்து வருகிறேன். எனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை சீர்குலைக்கும் வகையிலும், களங்கம் ஏற்படுத்தும் விதமாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக சுமத்தியுள்ளார்.

எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அவர், கூறும் நிறுவனங்களில் 3 நிறுவனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகவும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை 14ம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நேற்று காலை 10.15 மணிக்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் முன்பு ஆஜரானார். அப்போது மாஜிஸ்திரேட் இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு, இந்த அவதூறு வழக்கில் விசாரணை வரும் ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கும் என்றும், அன்றைய தினத்தில் அண்ணாமலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து அண்ணாமலை நீதிமன்றனத்தில் இருந்து வெளியேறினார். முன்னதாக, அண்ணாமலை நீதிமன்றத்திற்கு வரும் தகவல் அறிந்த பாஜ தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்பு தங்களது கொடிகளுடன் குவிந்தனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

* அவதூறு வழக்கில் தண்டனை கிடைத்தால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது
குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் ராகுல் காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் அவதூறு வழக்கு போன்று, அண்ணாமலை மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் இறுதியில் சைதாப்பேட்டை நீதிமன்றம் தண்டனை வழங்கும் பட்சத்தில், அண்ணாமலை அடுத்த 6 ஆண்டுகளுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின்படி எந்த ஒரு தேர்தலிலும் நிற்க முடியாது. இதனால் அண்ணாமலையின் அரசியல் பிரவேசம் முற்றிலும் அஸ்தமனமாகும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* நீதிபதிகள் குடியிருப்புக்குள் அண்ணாமலை சென்றதால் பரபரப்பு
டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக தனது ஆதரவாளர்களுடன் அண்ணாமலை நேற்று காலை 10 மணி அளவில் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்தார். அவரை அங்கிருந்த பாஜ தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர். அப்போது நீதிமன்ற நுழைவாயில் வழியாக நீதிமன்றத்திற்குள் செல்லாமல் நீதிபதிகள் குடியிருப்பு நுழைவாயிலுக்குள் அண்ணாமலை சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அண்ணாமலையை தடுத்து நிறுத்தி இந்த வழியாக நீதிமன்றத்திற்குள் செல்ல கூடாது. இது நீதிபதிகள் குடியிருப்பு பகுதி என்று கூறினர். அதை தொடர்ந்து அண்ணாமலை நீதிமன்ற நுழைவாயில் வழியாக நீதிமன்றத்திற்குள் சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது