Monday, September 16, 2024
Home » திமுக ஆட்சியில் பேரூராட்சிகளின் பிரமாண்டமான வளர்ச்சியால் உள்ளாட்சி நிர்வாகத்தில் நாட்டிலேயே முன்னணியில் நிற்கும் தமிழ்நாடு

திமுக ஆட்சியில் பேரூராட்சிகளின் பிரமாண்டமான வளர்ச்சியால் உள்ளாட்சி நிர்வாகத்தில் நாட்டிலேயே முன்னணியில் நிற்கும் தமிழ்நாடு

by Arun Kumar


சென்னை: கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் பேரூராட்சிகள் பிரமாண்டமான வளர்ச்சி அடைந்துள்ளதால் இந்தியாவிலேயே உள்ளாட்சிகள் நிர்வாகத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சி உட்பட மொத்தம் 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக நகராட்சிகளுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி அமைப்புகள் எனும் பிரிவு ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரூராட்சிகளின் வளர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மொத்த பரப்பளவு 5,983.50 சதுர கி.மீ. கொண்ட 490 பேரூராட்சிகளின் தற்போதைய மக்கள் தொகை 78,87,523 ஆகும். பேரூராட்சிகள் நிர்வாகம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முனைப்புடனும் செயல்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள் தொகைக்கு இந்த முயற்சிகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. மக்களுக்குத் தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் பேரூராட்சிகள் துறையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலை, பாலப் பணிகள்: நபார்டு திட்டத்தின்கீழ், 2021 முதல் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.602 கோடியில் 515 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 11 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகர்ப்புறச் சாலை கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ.812 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் 1583 கிலோ மீட்டர் நீளத்திற்கு 1178 சாலைப் பணிகள் நடைபெற்றுள்ளன. மாநில நகர்ப்புறச் சாலை மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.10.469 கோடி மதிப்பீட்டில் 137.57 கிலோ மீட்டர் நீளத்திற்கு மண் சாலைகளைத் தார்ச் சாலைகளாக, சிமெண்ட் கான்கிரீட் மற்றும் பேவர் பிளாக் சாலைகளாக மேம்படுத்தும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தெருவோர உணவு மையங்கள்: தெருக்களில் சுகாதார உணவு மையங்கள் மாமல்லபுரம், வேளாங்கண்ணி ஆகிய 2 பேரூராட்சிகளின் தெருக்களிலும் ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவு மையங்கள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகின்றன. சாலையோர வியாபாரிகளுக்குத் தள்ளுவண்டிகள் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேரூராட்சியில் 228 சாலையோர வியாபாரிகளுக்கு 1.88 கோடி தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.

வீடற்றவருக்கு தங்குமிடங்கள்: நகர்ப்புற வீடற்றவர்களுக்குத் தங்குமிடம் திட்டத்தின் கீழ் வேளாங்கண்ணியில் ரூ.76.10 லட்சம் மதிப்பீட்டில் ஒரு தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், ரூ.2.97 கோடியில் கருமாண்டி செல்லி பாளையம், மாமல்லபுரம், அவிநாசி ஆகிய இடங்களில் மூன்று தங்குமிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

தெருவோர வியாபாரிகளுக்கு கடன்: தெருவோர வியாபாரிகள் நலத் திட்டத்தின் கீழ் 46,990 சாலையோர வியாபாரிகளுக்கு முதல் தவணையாக ரூ.10,000 வீதமும், 2வது தவணையாக 14,376 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ,20,000 வீதமும், 3வது தவணையாக 1,807 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.50,000 வீதமும் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நீர்நிலைகள், பூங்கா மேம்பாடு: கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மூன்றாண்டுகளில் ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் 1,509 பணிகள் நடைபெற்றுள்ளன. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலைகள் அமைத்தல் நீர்நிலைகள் புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல் உட்பட 1199 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் ரூ.63.50கோடி மதிப்பீட்டில் 77 பேரூராட்சிகளில் 192 பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் பேரூராட்சிகளில் ரூ.2,391 .72 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வசதிகள் பூங்கா மேம்பாடு, நீர்நிலைகள் புனரமைத்தல் முதலிய மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

பேருந்து நிலையம், சந்தை பணிகள்: பேருந்து நிலையங்கள்-சந்தைகள் 490 பேரூராட்சிகளில் 203 பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளன. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.91.33 கோடி மதிப்பீட்டில் 66 புதிய பேருந்து நிலையப் பணிகளும், பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. ரூ.110 கோடியே 32 லட்ச மதிப்பீட்டில் 51 சந்தை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மின்தகன கூடங்கள்: பேரூராட்சிப் பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பாரம்பரிய எரிபொருள் முறையான மர எரிப்பு முறையைப் படிப்படியாக எரிவாயு தகனங்கள் மூலம் மாற்றவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் புதிதாக 99 எரிவாயு மின்தகனக் கூடங்கள் ரூ.147 கோடியில் அமைத்திட ஆணைகள் இடப்பட்டன. அவற்றுள் 41 எரிவாயு மின் தகன கூடங்கள் அமைக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.

பாதாள சாக்கடை திட்டம்: திமுக ஆட்சியில் 12 பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் ஒரத்தநாடு, வல்லம், மாமல்லபுரம், எஸ்.கண்ணணூர், வேளாங்கண்ணி, பெருந்துறை, பழனிசெட்டிபட்டி, திருமழிசை, மண்ணச்சநல்லூர், மேலச்சொக்கநாதபுரம் ஆகிய 10 பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மீதம் உள்ள திருப்பெரும்புதூர், திருப்போரூர் பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் முன்னேற்றத்தில் உள்ளன. தற்போது, இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 4 லட்சம் மரக்கன்றுகள்: ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்திடக் கரைகளைச் சுற்றிலும் பனை மரங்களை நடவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறது. இதுவரை 490 பேரூராட்சிகளில் 4,09,413 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

155 கோடியில் தெருவிளக்குகள்: 439 பேரூராட்சிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள 2,66,953 தெருவிளக்குகளை ரூ.155.56 கோடியில் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றி அமைத்திடும் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின்கீழ் ரூ.331 கோடியே 84 லட்சத்தில் 41,858 தனி நபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 190 இடங்களில் சமுதாயக் கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரூ.80 கோடியில் 185 கழிவு நீர் அகற்று வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

39 பேரூராட்சிகளில் சுற்றுலா மேம்பாடு: நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டு நிதியின் கீழ் 12 பேரூராட்சிகளுக்கு ரூ.6 கோடியில் நிலையான மானியமும் 27 பேரூராட்சிகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சத்தில் வேறுபட்ட மானியமும் ஆக ஒதுக்கீடு செய்யப்பட்டு சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

குடியிருப்பு அடிப்படை வசதிகள்: அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.51 கோடியே 81 லட்சத்தில் 37 மாவட்டங்களில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பழங்குடியினர் நலத் திட்டத்தின்கீழ் கடலூர், திண்டுக்கல், நீலகிரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு ரூ.2 கோடியே 3 லட்சம் ஒதுக்கீட்டில் குடிநீர் வசதி, சோலார் விளக்கு, தெரு விளக்கு ஆகிய 89 வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

முதலமைச்சர் விருதுகள்: கருணை அடிப்படையில் நியமன திட்டத்தின்கீழ் பேரூராட்சிகளில் பணிபுரிந்த காலத்தில் இயற்கை எய்திய 88 அரசுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் மக்கள் பயன் அடையும் வகையில் திட்டப்பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து நிறைவேற்றியுள்ள கருங்குழி, கன்னியாகுமரி, சோழவந்தான், விக்கிரவாண்டி, ஆலங்குடி, வீரக்கல்புதூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு முதலமைச்சர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டு மண்டல அளவிலான விருது பேரூராட்சிப் பணிகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றிய கீழ்வேளூர் பேரூராட்சிக்கு வழங்கி பாராட்டப்பட்டுள்ளன.

இப்படியாக கடந்த 3 ஆண்டுகால முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், அனைத்துப் பிரிவினரும் பயனடையும் முத்திரைத் திட்டங்கள் பலவற்றை மிகச் சிறப்பாக உருவாக்கி நிறைவேற்றி வருவதுபோல், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என ஆட்சி நிர்வாக அமைப்புகளின் பணிகளையும் பாராட்டத்தக்க முறையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த மகத்தான பணிகள் காரணமாக உள்ளாட்சிகள் நிர்வாகத்தில் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்து விளங்குகிறது.

You may also like

Leave a Comment

14 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi