Sunday, September 29, 2024
Home » திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் 27 சிப்காட் தொழிற்பூங்காக்கள் தொடக்கம்: மேம்படும் பொருளாதார வளர்ச்சி – உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு ; அடுத்தாண்டிற்குள் 22 தொழில் பூங்காக்களை உருவாக்க அரசு திட்டம்

திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் 27 சிப்காட் தொழிற்பூங்காக்கள் தொடக்கம்: மேம்படும் பொருளாதார வளர்ச்சி – உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு ; அடுத்தாண்டிற்குள் 22 தொழில் பூங்காக்களை உருவாக்க அரசு திட்டம்

by Karthik Yash

சென்னை: இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களை காட்டிலும் கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களான மகளிர் விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமை தொகை, புதுமை பெண் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டும் வருகின்றன.

இது ஒருபுறமிருக்க, இந்தியாவிலேயே தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக திகழ வேண்டும் என்ற எண்ணத்திலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கும், 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தை பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கான முயற்சியாக துபாய், அமெரிக்காவில் உள்ள உலகின் தலைசிறந்த முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து தமிழகத்திற்கு முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வருகிறார். அதன்படி, இந்தியாவிலேயே பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் முகவரியாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கான அடிக்கலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டினார். இதன் மூலம் தமிழ்நாட்டில் 50வது சிப்காட் தொழிற்பூங்கா என்பது உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த காலங்களில் 23 சிப்காட் தொழிற்பூங்காக்களே இருந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 வருடங்களிலேயே பனப்பாக்கம் தொழிற்பூங்காவுடன் சேர்த்து 27 சிப்காட் பூங்காக்கள் இதுவரை திறக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது: தமிழ்நாட்டில் தற்போது 50வது சிப்காட் தொழிற்பூங்காவிற்கான அடிக்கலை முதல்வர் நாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி பெற பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மட்டுமின்றி மற்ற நாடுகளில் இருக்கும் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவான தளமாக அமைத்து வருகிறோம். மேலும், சிப்காட் மூலம் அடுத்தாண்டிற்குள் 22 தொழிற்பூங்காக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

* சிப்காட் சாதனைகள்
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் தொழிற்துறை பூங்காக்களை உருவாக்குவதன் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற கொள்கையுடன் கடந்த 1971ம் ஆண்டு சிப்காட் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதில் 3275க்கு மேற்பட்ட தொழில் துறை பிரிவுகளும், 1.83 லட்சம் கோடி அளவிற்கு கூட்டு முதலீடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, 8.15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது.

சிப்காட் மூலம் அமைய உள்ள 17 தொழிற்பூங்காக்கள்
தொழிற்பூங்கா மாவட்டம் பரப்பளவு
பனப்பாக்கம் ராணிப்பேட்டை 1,213 ஏக்கர்
அதகபாடி நிலை-1 தர்மபுரி 1733 ஏக்கர்
அதகபாடி நிலை-2 தர்மபுரி 690 ஏக்கர்
இ.குமாரலிங்கபுரம் நிலை-1
(பி.எம். மித்ரா பூங்கா உட்பட) விருதுநகர் 1500 ஏக்கர்
இ.குமாரலிங்கபுரம்
நிலை – 2 விருதுநகர் 581 ஏக்கர்
அல்லிக்குளம் தூத்துக்குடி 2234 ஏக்கர்
தொழிற்சாலை
புறம்போக்கு நிலம் தூத்துக்குடி 227 ஏக்கர்
வல்லப்பாக்கம் காஞ்சிபுரம் 118 ஏக்கர்
மணலூர் (விரிவாக்கம்) திருவள்ளூர் 2433 ஏக்கர்
மேல்மா திருவண்ணாமலை 3174 ஏக்கர்
சூளகிரி (விரிவாக்கம்) கிருஷ்ணகிரி 1918 ஏக்கர்
குருபரப்பள்ளி (விரிவாக்கம்) கிருஷ்ணகிரி 24 ஏக்கர்
நாகமங்கலம் கிருஷ்ணகிரி 1440 ஏக்கர்
இலுப்பக்குடி சிவகங்கை 775 ஏக்கர்
மணக்குடி ராமநாதபுரம் 225 ஏக்கர்
சக்கரக்கோட்டை ராமநாதபுரம் 313 ஏக்கர்
இ.வேலாயுதபுரம் தூத்துக்குடி 355 ஏக்கர்
கங்கைக்கோணன்
(விரிவாக்கம்) திருநெல்வேலி 1665 ஏக்கர்
வண்டுவாஞ்சேரி நாகப்பட்டினம் 250 ஏக்கர்
சேலம் டெக்ஸ்டைல் பார்க் சேலம் 110 ஏக்கர்
செங்கிப்பட்டி – பாளையப்பட்டி தஞ்சாவூர் 256 ஏக்கர்
மேலூர் மதுரை 278 ஏக்கர்

You may also like

Leave a Comment

11 + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi