Tuesday, September 17, 2024
Home » திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 1355 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள்: இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை தகவல்

திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 1355 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள்: இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை தகவல்

by Suresh

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறையின் 1,355 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள், ரூ.3,776 கோடியில் 8,436 கோயில்களில் பணிகள் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆயிரக்கணக்கான கோயில்களைக் கொண்டு உள்ளது. அவற்றுள் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தஞ்சைப் பெரியகோயில் போலப் பழைமையான, பிரம்மாண்டமான பல கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்களுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள், ஐம்பொன் சிலைகள், தங்கம், வெள்ளி நகைகள் எல்லாம் ஏராளமாய் இருந்தன. அவை எல்லாம் முறையாகப் பராமரிக்கப்படாமல் அங்காங்கே வாழ்ந்த பல பெரும்மக்களின் ஆக்கிரமிப்பில் முடங்கிப் பொதுமக்களுக்கு முறையாகப் பயன்படாமல் கிடந்தன. இந்நிலையில் தான் ஆங்கிலேயர் ஆட்சியில் 1920ம்ஆண்டில் டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டு, 1921 ஜனவரில் நீதிக் கட்சி ஆட்சி சென்னை மாகாணத்தில் அமைந்தது. அந்த நீதிக் கட்சி ஆட்சியில்தான் கோயில் பணிகள் முறையாக நடைபெற வழிவகுக்கப்பட வேண்டும் என்பதற்காக 1925ல் பனகல் அரசர் முதல்வராக இருந்தபோது இந்து சமய அறநிலையங்கள் துறை இந்தியாவிலேயே முதன்முதலில் தொடங்கப்பட்டது.

கோயில்களில் தனியார் சிலரின் மேலாதிக்கத்தாலும், விருப்பு வெறுப்புகளாலும் ஏற்படும் கொடுமைகளைத் தடுக்கவும், கோயிலுக்கென எழுதி வைக்கப்பட்ட நிலங்கள் பாதுகாக்கப்படவும், அவற்றிலிருந்து வரும் வருவாய், வழியிலேயே கசிந்து காய்ந்து விடாமல் முறையாகக் கோயில் கணக்கில் சேரவும், நகைகள், சிலைகள் ஆகியவை தக்கார் பொறுப்பில் பாதுகாக்கப்படவும் வேண்டுமெனும் நோக்கில்தான் இத்துறை அமைக்கப்பட்டது.
அறநிலையத்துறைக்குத் தனி அமைச்சகம் கண்ட கலைஞர் பேரவையில், 1967 வரை அறநிலையத்துறை மானியம், “பல்வகை” என்ற அளவில்தான் சீந்துவாரற்றுக் கிடந்தது. 1970ம் ஆண்டு கலைஞர் ஆட்சியிலதான் அறநிலையத் துறைக்குத் தனி அமைச்சர், தனி வரவு செலவுத் திட்டம், பேரவையில் தனி விவாதம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அதன் பின்னர்தான் அறநிலையத் துறையின் பணிகள் சிறப்பாகவும் செம்மையாகவும் நடைபெற்றன. கோயில் விழாக்கள் தங்குதடையின்றி எங்கும் நிகழ்ந்து மக்கள் இதயங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைத்தன.

கோயில் பணிகள் சிறப்பாக நடைபெற்றதுடன் ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன. கோயில் சொத்துகளைப் பராமரிக்கக் கோயில்தோறும் பதிவேடுகள் உருவாக்கப்பட்டன. கோயில்களின் உண்டியல்களைப் பராமரித்திட தனி சட்டமே முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது. கோயில் நிலங்களில் நீண்டகாலக் குத்தகை நடைமுறை தடுக்கப்பட்டது. அந்த நிலங்களில் நிலையான கட்டடங்கள் கட்டக்கூடாது என்றும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. மிகவும் பழைமையான கோயில்களுக்கெல்லாம் திருப்பணிகள், குடமுழுக்கு விழாக்கள் எல்லாம் பலரும் பாராட்டக்கூடிய அளவில் தொடர்ந்து நடைபெற்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபோது , கோயில் பணிகளை முறையாகவும், சிறப்பாகவும் நடத்திட வேண்டுமெனக் கருதி மிகச் சிறந்த இறையன்பர்களில் ஒருவராகத் திகழும் சேகர்பாபு, அறநிலையத் துறை அமைச்சராகத் தேர்வு செய்து, நியமித்து, கோயில் திருப்பணிகள் எல்லாம் முன் எப்போதும் இல்லாத வகையில் செம்மையாக நடைபெற வழிவகுத்தார்கள். கடந்த 3 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை பணிகள் ஆற்றிடும் அளப்பரிய பணிகளைக் காணும் பொதுமக்கள் பிரமிக்கின்றனர்.

1,355 கோயில்களில் திருக்குடமுழுக்கு விழாக்கள் :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 7.5.2021 முதல் 31.1.2024 வரை மூன்றாண்டுகளில் 1,355 கோயில்களில் திருப்பணிகள் நிறைவுற்றுத் திருக்குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன. ரூ.3,776 கோடியில் 8,436 கோயில்களில் திருப்பணிகள் 8,436 கோயில்களில் 18,841 திருப்பணிகள் ரூ.3,776 கோடியில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு 5,775 திருப்பணிகள் முடிக்கப் பட்டுள்ளன.

ரூ.50 கோடியில் கிராமப்புற மற்றும் ஆதிராவிடர் கோயில்கள் திருப்பணி:
2021-2022ம் நிதியாண்டில் 1,250 கோயில்களுக்குத் திருப்பணி நிதி தலா ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு ரூ.25 கோடி முதலமைச்சரால் வழங்கப்பட்டது. 2022-2023 கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் கோயில் திருப்பணிக்கான நிதி உதவி ரூ.2 லட்சம் வீதம் மேலும், 1250 கோயில்களுக்கு அனுமதிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

திருக்குளங்கள் சீரமைப்பு :
143 கோயில்களின் குளங்களைச் சீரமைப்பதற்கு ரூ.84.16 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. 3 கோயில்களில் புதிய திருக்குளங்கள் ரூ.2.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகின்றன.

ரூ.62.76 கோடியில் 27 கோயில்களில் ராஜகோபுரங்கள்:
சமயபுரம், திருவெண்ணெய்நல்லூர், திருப்பாற்கடல், தாராபுரம், அரியலூர், சென்னை கீழ்பாக்கம் ஆகிய இடங்களில் 6 கோயில்களில் ரூ. 8 கோடியில் புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன. 2022 – 2023ல் 6 கோயில்களுக்கு ரூ.28.78 கோடியில் புதிய ராஜகோபுரங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. 2023-2024ல் 15 கோயில்களில் ராஜகோபுரங்கள் ரூ.25.98 கோடியில் கட்டப்படவுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வரகுணநாத சுவாமி கோயில், 3 நிலை ராஜகோபுரம் இறையன்பரின் நிதியுதவி ரூ.50 லட்சத்தில் கட்டப்படுகிறது.

756 திருக்கோயில்களில் அன்னதானம்:
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் 8 கோயில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் தற்போது 15 கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கப்படுவதுடன் இவ்வாண்டு மேலும் 5 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அன்னதானத் திட்டம் இதுவரை 756 கோயில்களில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 82,000 பேர்கள் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாண்டு மேலும் 7 கோயில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.‘

ரூ.5,577.35 கோடி மதிப்புடைய ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு :
கடந்த மூன்றாண்டுகளில் அறநிலையங்களுக்குச் சொந்தமான நிலம்,கட்டடம், மனை ஆகியவற்றில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பிலிருந்து ரூ.5577.35 கோடி மதிப்பிலான 6140.59 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது.

நில அளவீடு:
கடந்த மூன்றாண்டுகளில் 1,59,507 ஏக்கர் நிலங்கள் நவீன ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு 64,522 கற்கள் நடப்பட்டுள்ளன. நில அளவைப் பணியில் 172 உரிமம் பெற்ற நில அளவையர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில் நிலங்களில் நடைபெற்றிருந்த தவறுகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டு 4,189.88 ஏக்கர் நிலம் மீண்டும் கோயில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது. கணினிச் சிட்டாவில் தவறுகள் திருத்தம் செய்ய வருவாய்த்துறை கோட்டாட்சியரிடம் முறையீடு செய்யப்பட்டு 3078.95 ஏக்கர் நிலம் திருக்கோயில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது.

ரூ.411.45 கோடியில் திருமண மண்டபங்கள் – விடுதிகள் – குடியிருப்புகள் :
ரூ.257.28 கோடியில் மொத்தம் 73 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. பக்தர்களின் நலனுக்காக 17 தங்கும் விடுதிகள் கட்டும் பணிகள் ரூ.70.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 48 குடியிருப்புகள் ரூ. 83.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன.

ரூ.39.56 கோடியில் புதிய பசுமடங்கள் – மேம்பாட்டுப் பணிகள்:
ரூ. 18.90 கோடி மதிப்பீட்டில், மூன்று புதிய பசுமடங்கள் ஏற்படுத்தும் பணிகளும், ரூ.20.66 கோடி மதிப்பீட்டில் 123 கோயில்களில் உள்ள 127 பசுமடங்களை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரூ.191.65 கோடி மதிப்புடைய தங்கக் கட்டிகள் வங்கிகளில் இருப்பு :
ஓய்வுபெற்ற மாண்பமை நீதியரசர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு 6 கோயில்களுக்குச் சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் உருக்கப்பட்டு, 344.334 கி.கி தங்கக் கட்டிகளாக மாற்றி, ரூ.191.65 கோடி மதிப்பீட்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு வட்டி வருவாய் ரூ.4.31 கோடி வரப்பெறுகிறது. மேலும், 11 கோயில்களுக்குச் சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டுத் தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

கோயில்களில் முதலீடுகள் :
12,959 கோயில்களுக்குத் தலா ரூ. 1லட்சம் வீதம் கூடுதல் தொகை முதலீடு செய்யும் வகையில் ரூ.130 கோடி அரசு மானியம் விடுவிக்கப்பட்டு கோயில்களின் பெயரில் கூடுதல் முதலீடுகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

17,000 கோயில்களில் ஒருகால பூஜை திட்டம் :
ஒரு கால பூஜை திட்டத்தில் கோயில் ஒன்றுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் 2,000 கோயில்களுக்கு அரசு மானியம் ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தற்போது 17,000 கோயில்கள் பயனடைந்து வருகின்றன.

15,753 அர்ச்சகர்கள் பயன் :
ஒரு கோயிலுக்கு ஓர் அர்ச்சகர் வீதம் பதிவு செய்து, மாத ஊக்கத் தொகை ரூ.1.000 வீதம் வழங்கப்பட்டு ஜனவரி 2024 வரை 15,753 அர்ச்சகர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் கோயில்களுக்கு மின் கட்டணத்தைச் செலுத்த 15,000 கோயில்களுக்கு 1.9.2023 முதல் 29.02.2024 வரை ரூ.3கோடியே 1 லடசத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப் பட்டுள்ளது. ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் பணியாற்றிவரும் அர்ச்சகர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10,000 வீதம் நடப்பாண்டில் 400 மாணவர்களுக்குக் கல்வித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாகச் செலவுகளுக்கு அரசு மானியத் தொகை :
கன்னியாகுமரி மாவட்டத்தில் 490 கோயில்களின் நிருவாகச் செலவுகளுக்கு அரசு மானியம் ரூ.6 கோடி என்பது ரூ.8 கோடியாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 225 கோயில்களின் நிருவாகச் செலவுகளுக்கு அரசு மானியம் ரூ.3 கோடி என்பது ரூ.5 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் தேவஸ்தான நிருவாகத்தில் உள்ள 88 கோயில்களின் நிருவாகச் செலவுகளுக்கு முதன் முறையாக ரூ.3 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. சுவாமிமலை முருகன் கோலுக்கு மின்தூக்கி வசதி பழனி கோயிலில் கம்பிவட ஊர்தி வசதி இயக்கப்பட்டு வருகிறது. 80 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பழனி மற்றும் இடும்பன் மலை இடையே கம்பிவட ஊர்தி, அனுவாவி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய கோயில்களில் கம்பிவட ஊர்திகள் அமைத்திட சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கும்பகோணம், சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோயிலில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறன.

கோயில்கள் பணியாளர்கள் நலன்:
கோயில்களில் பணியின்போது இறந்த 106 பணியாளர்களின் வாரிசுதார்களுக்குக் “கருணை அடிப்படையில் பணி நியமன” ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து தினக்கூலி தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாகப் பணிபுரிந்த 1,278 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர். கோயில்கள் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணங்கள் நடத்தி வைக்கும் திட்டத்தின்கீழ், ரூ.50,000 மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் 1,100 இணைகளுக்கும், 128 மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரசுச் செலவில் ஆன்மிகப் பயணம்:
500 பக்தர்கள் ராமேசுவரம், ராமநாத சுவாமி கோயிலிலிருந்து காசி, விசுவநாத சுவாமி கோயிலுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு நிதி ரூ.125 லட்சம் செலவிலும், 1,000 பக்தர்கள் அறுபடைவீடுகளுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு நிதி ரூ.1.50 கோடி செலவிலும் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். 2022-2023ம் ஆண்டில் முக்திநாத் ஆன்மிக பயணம் சென்று வந்தவர்களுக்கு தலா ரூ.20,000 வீதம் பயண செலவாக வழங்கப்படுகிறது.

வள்ளலார் விழா:
வள்ளலாரின் 200வது ஆண்டு பிறந்தநாள், தர்மசாலை தொடங்கி 156 வது ஆண்டு ஜோதி தரிசனத்தின் 152வது ஆண்டு ஆகிய முப்பெரும் விழா 2022 அக்டோபர் மாதம் முதல் 52 வாரங்கள் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டு, வள்ளலார் 200 இலச்சினை, சிறப்பு தபால் உறை, சிறப்பு மலர் ஆகியவை வெளியிடப்பட்டன. ரூ.3.25 கோடி செலவில் 52 வார விழாக்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. வள்ளலார் 200 விழாவில் 52 வார தொடர் அறநிகழ்வின் நிறைவுவிழா 5.10.2023 அன்று நடைபெற்றது. அவ்விழாவில் ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள வள்ளலார் சர்வதே மையத்திற்கான ஆணையினை வழங்கினார்கள்.

கோயில் நடத்தும் கல்வி நிறுவனங்கள்:
கோயில்கள் சார்பில் ஒரு பல்தொழில்நுட்ப கல்லூரி உட்பட10 கல்லூரிகளும், 25 பள்ளிகளும், திருமடங்களின் சார்பில் 7 பள்ளிகளும், 16 பயிற்சிப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 2022-23ல் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்கள் உட்பட 94 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கும், 3 ஆண்டு பயிற்சி முடித்த 4 ஓதுவார் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கும் 12.9.2023 அன்று, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

11 பெண் ஓதுவார் உட்பட 42 ஓதுவார்கள் நியமனம்:
2023-2024ம் கல்வி ஆண்டில் கோயில்கள் மூலம் நடத்தப்படும் பயிற்சிப்பள்ளிகளில் தற்போது 212 மாணவர்கள் முழுநேரமாகவும், 80 மாணவர்கள் பகுதிநேரமாகவும் பயின்று வருகின்றனர். 11 பெண் ஓதுவார்கள் உட்பட 42 ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்தகைய பல்வேறு பணிகளில் தமிழ்நாட்டின் அறநிலையத்துறை பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று – இறையன்பர்கள் – பக்தர்கள் அனைவரும், பொதுமக்களும், பத்திரிகைகளும் திராவிட மாடல் அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனமுவந்து பாராட்டிவருகின்றனர்.

You may also like

Leave a Comment

fifteen − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi