அடித்தட்டு மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி திமுக: ராயபுரத்தில் அமைச்சர் பொன்முடி பேச்சு

தண்டையார்பேட்டை: அடித்தட்டு மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி திமுகதான் என ராயபுரத்தில் நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள திருமணமண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ தலைமை வகித்தார். ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளரும் வனத்துறை அமைச்சருமான பொன்முடி கலந்துகொண்டு பேசியது:

தமிழக முதல்வர் கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். உதாரணமாக பல்வேறு திட்டங்களை சாதனைகளை கூறலாம். அடித்தட்டு மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி திமுகதான். இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் முதன்மை முதல்வராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார் என்றால் அதுதான் திராவிட மாடல் அரசு. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை திட்டம், அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவித்து கோயில்களில் இருந்த பாகுபாட்டை போக்கினார்.

வெளிநாட்டிற்கு சென்று தமிழ்நாட்டிற்கு அதிகளவில் முதலீடை கொண்டு வந்தார். இப்படி பல்வேறு திட்டங்களை நமது முதலமைச்சர் வழங்கி வருகிறார். சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியடைந்தோம். நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி அடைந்தோம். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று முதலமைச்சரின் கரத்தை வலு படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், ஜெயராமன், முருகன், மாவட்ட அவை தலைவர் வெற்றி வீரன், மாவட்ட துணை செயலாளர் கமலக்கண்ணன், மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன், மற்றும் பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை, காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

காவல்துறை பளுதூக்கும் குழு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை பாராட்டினார் காவல்துறை தலைமை இயக்குநர்

சொத்துவரி உயர்வு என்பது அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் உயர்த்தப்பட்டது: அமைச்சர் சிவசங்கர்