மதுரை எய்ம்ஸ் எப்போ வரும் அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் திமுக எம்பி.க்கள் மோதல்

புதுடெல்லி: மக்களவையில் பிரதமர் மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, திமுக எம்பி.க்கள் 5 ஆண்டுகளாகியும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் எப்போ வரும் என்று கூறி கோஷமிட்டனர். இதற்கு பதிலளித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: நிலம் கையகப்படுத்துவதை தமிழ்நாடு அரசு தாமதித்ததால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் செலவு ரூ.1,200 கோடியில் இருந்து ரூ.1,900 கோடியாக அதிகரித்துள்ளது.

எனவே, இந்த தாமதத்திற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும். கொரோனா கால கட்டத்தில், நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்று மாநில அரசு கூறியது. இதன் விளைவாக தற்போது எய்ம்ஸ் கட்டும் பணி தாமதமாகிறது. மாநில அரசுக்கு இருக்கும் பிரச் னைகளை புரிந்து கொள்ள முடிகிறது. மூத்த உறுப்பினரான டி.ஆர். பாலு, ஜப்பானிடம் இருந்து கடன் பெறுவது பிரதமருக்கு அவமானமாக இல்லையா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மதுரையில் எய்ம்ஸ் கட்டுவதற்கான மொத்த செலவு ரூ.1,977.80 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கடன் தொகை ரூ.1,627 கோடி.

இதற்கு முன்பு மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பானிடம் இருந்து ஒன்றிய அரசு கடன் பெற்றது. எய்ம்ஸ் கட்டுவது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் திட்டம் என்பதால், ஒன்றிய அரசே முழு கடனுக்கும் பொறுப்பாகும். எனவே இது குறித்து தமிழ்நாடு அரசு கவலைப்பட தேவையில்லை. இதனால் மாநில அரசுக்கு நிதிச் சுமை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார். மதுரையில் எய்ம்ஸ் எப்போது திறக்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதிலில் எதுவும் குறிப்பிடவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.பி.க்கள் எப்போ, எப்போ என்று கோஷமிட்டபடி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

* நேபாளத்தில் இருந்து தக்காளி இறக்குமதி
அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறிய போது, “மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இதற்கான அமைச்சர்கள் குழு உரிய நேரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மொசம்பிக்கில் இருந்து துவரம் பருப்பு, மியான்மரில் இருந்து உளுந்து இறக்குமதி செய்யப்படுகிறது. விலைவாசியை கட்டுக்குள் வைக்கவும் நேபாளத்தில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது,’’ என்று கூறினார்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்