திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 கோடி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: திமுகவில் தற்போது 2 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் ,கலைஞர் அரை நூற்றாண்டு காலம் கட்டி காத்த திமுகவை மேலும் வலிமைப்படுத்த, ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க ‘‘உடன்பிறப்புகளாய் இணைவோம்’’ என்ற மாபெரும் முன்னெடுப்பு தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி புதிய உறுப்பினர் சேர்க்கையை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதிக்குள் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதால் தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வந்தது.

இந்த நிலையில் திமுக இணைய தளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அதில் அண்மை நிகழ்வுகள், திராவிட மாடல், சாதனைகள், கொள்கைகள், வரலாறு, மக்கள் பிரதிநிதிகள் என ஏராளமான விவரங்கள் உள்ளன. அதேபோல் திமுக வெளியீடுகள், தேர்தல் அறிக்கைகள், கருணாநிதி வரலாறு என இன்னும் பல அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அரசு சார்ந்த அறிவிப்புகள், புகைப்படங்கள், அறிக்கைகளும் திமுக இனையதளப் பக்கத்தில் இடம் பெறும் வகையில் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் திமுக தொடர்பான பல்வேறு சுவாரஸ்ய தகவல்களும் அதில் இடம் பெற்று உள்ளன.

குறிப்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் 2 கோடி கட்சி உறுப்பினர்கள், 23 சார்பு அணிகள், 125 சட்டமன்ற உறுப்பினர்கள், 20 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1.5 கோடி தொண்டர்களுடன் கொண்ட கட்சி அதிமுக தான் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது அதிமுகவை பின்னுக்கு தள்ளி, 2 கோடி தொண்டர்களுடன் அந்த பட்டியலில் திமுக முதலிடம் பிடித்து உள்ளது.

இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சியையும், மாநில மக்களுடன் அவர் மேற்கொண்ட பயணத்தையும் கண்டு, நாள் தோறும் ஏராளமானோர் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் எங்கள் இலக்கான 2 கோடி கட்சி உறுப்பினர்கள் திமுகவில் இடம் பெற வேண்டும் என பாடுபட்டோம். அந்த இலக்கை இப்போது நாங்கள் அடைந்துவிட்டோம்’’ என்றார்.

Related posts

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!