திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள்; அவர்கள் எந்தப் புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள்: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள்; அவர்கள் எந்தப் புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியிட்டு விழா சென்னை கலைவானர் அரங்கில் நடைப்பெற்று வருகிறது. நூலின் முதல் பிரதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். விழாவில் உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த்; கலைஞர் மீது மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உலகத்தில் எந்த தலைவருக்கும் இல்லாத வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக நடத்தியதாக முதலமைச்சருக்கு ரஜினி பாராட்டு தெரிவித்தார். கலைஞரின் புகழ் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. மு.க.ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் பெற்ற வெற்றியே அவரது ஆளுமையை சொல்லும். வெற்றிக்காக பலர் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அதை சர்வ சாதாரணமாக செய்கிறார். திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை சிறப்பாக கையாள்கிறார்

கலைஞர் நினைவு மண்டபத்தை தாஜ்மகால் போல் கட்டியுள்ளனர். கலைஞரை ராஜ்நாத் சிங் அரை மணி நேரம் பாராட்டி பேசியுள்ளார். கலைஞரை ராஜ்நாத் சிங் பாராட்டி பேசியிருக்கிறார் என்றால் அவருக்கு மேலிடத்தில் இருந்து சொல்லியிருப்பார்கள். கலைஞரைப் போல் சோதனைகளை வேறு யாராவது எதிர்கொண்டிருந்தால் காணாமல் போயிருப்பார்கள். திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள்; அவர்கள் எந்தப் புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள்.

எப்போதும் உற்சாகமாக என்னை வரவேற்கும் கலைஞர் 2 முறை மட்டும் சோகமாக வரவேற்றார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சோர்வோடு இருந்தார் கலைஞர். வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோதும் சோர்வுடன் இருந்தார் கலைஞர். நான் மருத்துவமனையில் இருந்தபோது என்னை சந்தித்து கண்ணீர் விட்டார் கலைஞர் என்று கூறினார்.

 

Related posts

செப் 18: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு