தஞ்சை அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து திமுக பிரமுகர் தற்கொலை

திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் தெற்கு வீதியை சேர்ந்த பாலா (எ) பாலசுப்ரமணியம் (42). திருபுவனம் பேரூர் திமுக துணை செயலாளர். அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்ததோடு, ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் அப்பகுதியில் வசிக்கும் நெசவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் பணம் கட்டியிருந்தனர். கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது வாடிக்கையாளர்களிடமிருந்து சரிவர பணம் வசூலாக வில்லை. இதனால் பணம் கட்டி ஏலம் எடுத்தவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் இவரால் மொத்த தொகை கொடுக்க முடியாமல் போனது. இதனால் பணத்தை ஈடுகட்ட முடியாத விரக்தியில் பாலா இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் வெளியில் சென்று வருவதாக மனைவி நந்தினியிடம் சொல்லிவிட்டு சென்றார். பின்னர் இரவு 10 மணியளவில், அவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக நந்தினிக்கு, கும்பகோணம் ரயில்வே போலீசாரிடம் இருந்து தகவல் வந்தது. இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். உடனே உறவினர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். விசாரணையில் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தேப்பெருமாநல்லூர் பகுதியில் ரயில் முன்பு பாய்ந்து பாலா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 55 வருடம் சிறை

ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு; இருமாநில சொத்துக்கள் பிரிக்க விரைவில் குழு அமைப்பு