திமுக வழக்கறிஞர் அணி சார்பில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருத்தரங்கம் :சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ அறிவிப்பு

சென்னை:திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்பதோடு, இச்சட்டங்கள் ஜனநாயக நாடாக திகழும் நம் இந்திய நாட்டினை, ‘காவல்துறை ஆட்சி நாடாக மாற்றிவிடும் அரசியல் அமைப்பிற்கு எதிரான, ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாஜ அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, திமுக சட்டத்துறையின் சார்பில் கடந்த 5ம்தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் நுழைவு வாயிலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்று.

அதை தொடர்ந்து 6ம்தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் ‘மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்’ இந்தியாவே வியந்து நோக்கும் வகையில் மாபெரும் வெற்றியடைந்தது. இதைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில், எனது தலைமையில், சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருத்தரங்கம் வரும் 20ம்தேதி மாலை 4 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ளது.

இக்கருத்தரங்கில், ஒருங்கிணைந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இதை தொடர்ந்து, 21ம்தேதி 24 காலை 9 மணி அளவில் சென்னை, எழும்பூரில் உள்ள ஓட்டல் ரமடாவில் எனது தலைமையில் திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் மற்றும் சட்டத்துறை மாநில நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடக்க உரையாற்றுகிறார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிறைவுரையாற்ற உள்ளார். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு அந்தந்த மாவட்ட, மாநகர அமைப்பாளர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வரும் 27ம்தேதி மாலை 4 மணியளவில் தென்மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சித்த மருத்துவமனை அருகில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் தென் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில், எனது தலைமையில், சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

2வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இலங்கை பலப்பரீட்சை: முதல் வெற்றிக்கு முனைப்பு

சென்னையில் இன்று டிஎன்பிஎல் பைனல்: கோவை – திண்டுக்கல் மோதல்

ஹாக்கி காலிறுதியில் இன்று கிரேட் பிரிட்டன் சவாலை முறியடிக்குமா இந்தியா