நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் வலிமையுடன் சந்திக்க திமுகவினர் தயாராக இருக்க வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்கும் வலிமையுடன் திமுகவினர் இருக்க வேண்டும். அரசியல் எதிரிகளை உமியென ஊதி தள்ளி, அரிசியெனும் வெற்றியை அள்ளி குவிப்போம் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் திமுகவின் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவதற்கான பணிகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்.

நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் திமுக பொறுப்பாளரை நியமிக்கும் பணி நிறைவடைந்து, பூத் கமிட்டிகளும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் முறையாக அமைக்கப்பட்டு, தலைமைக் கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியையும் திமுகவினர் முனைப்புடன் செயலாற்றி நிறைவேற்றி உள்ளனர். மாநிலம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை ஒரே நேரத்தில்-ஒரே இடத்தில் சந்திப்பதைவிட, மண்டலம் மண்டலமாகச் சென்று சந்திப்பது பயன் தரும் என்பதால் முதற்கட்டமாக, திருச்சி-கருமண்டபம் ராம்ஜி நகரில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் வரும் 26ம் தேதிகாலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி முகாமில் டெல்டா மாவட்டங்களில் உள்ள 15 திமுக மாவட்டங்களில் இருந்து 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தலைமைக் கழகத்திலிருந்து அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் விவரங்களும் நேரடியாக சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் தயாராக உள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்குத் தயாராகும் விதத்தில் நடைபெறவுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டமும் திருச்சியில் தொடங்கவுள்ளது. டெல்டா என்றவுடனே நேருவிடம் தான் கூறினேன். அவரும் நாள்தோறும் அந்தக் கூட்டம் குறித்து என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

அவருக்கு உறுதுணையாகத் தலைமைக் கழகத்தின் சார்பில், திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர்கள் ஆஸ்டின், தாயகம் கவி ஆகியோரும் ஒருங்கிணைத்து வருகிறார்கள். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பணிகள் தேர்தல் நாளன்று வாக்குகளைப் பெறுவதோடு முடிவடைந்து விடுவதில்லை. அரசுக்கும், திமுகவிற்கும், வாக்காளர்களுக்கும் பாலமாகச் செயல்படும் பெரும் பொறுப்பு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடமே உள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் போன்ற முக்கியமான பணிகளும் உள்ளன. புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட, இறந்துவிட்ட வாக்காளர்கள், தேர்தல் நாளன்று திடீரென ‘உயிர்த்தெழுந்து’ வந்துவிடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியமானதாகும்.

முந்தைய பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில், திமுக ஆதரவு வாக்காளர்கள் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டு, போலி வாக்காளர்களை அதிகளவில் சேர்த்துள்ளதை அறிவோம். எனவே தான் உங்களை இன்னும் கூர்மைப் படுத்தும் வகையில் இந்த மாபெரும் பயிற்சி கூட்டம் நடைபெறவுள்ளது. திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் நாளன்று ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் இப்பாசறைக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட இக்காலக்கட்டத்தில் திமுகவினராகிய நீங்கள் சமூக வலைத்தளங்களில் முறையாக இயங்கிடும் வண்ணம் தயாராகும் விதமாக சமூக ஊடகங்கள் குறித்தான பயிற்சிகள் இக்கூட்டத்தில் வழங்கப்படவுள்ளன.

திருச்சியில் நடைபெறவுள்ள பயிற்சிப் பாசறையில், முதன்மைச் செயலாளர் அமைச்சர் நேரு வரவேற்புரை ஆற்றவுள்ளார். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கடமைகளும் பணிகளும் என்ற தலைப்பில் திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விளக்கம் திமுக வெளிநாடு வாழ் இந்தியர் நல அணியின் செயலாளர் அப்துல்லா எம்.பி., திராவிட மாடல் திமுக அரசின் மக்கள் நலன் காக்கும் சமூக நலத்திட்டங்கள் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோரும், சமூக வலைத்தளங்கள்-பயன்பாடும், செயல்படுத்த வேண்டிய முறையும் குறித்து திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தியும் விரிவாக விளக்கவுள்ளார்கள். காடுவெட்டி தியாகராஜன் நன்றியுரை ஆற்றுகிறார்.

டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மற்ற மாவட்ட செயலாளர்களான அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் ரகுபதி, அமைச்சர் சி.வெ.கணேசன், துரை.சந்திரசேகரன், சு.கல்யாணசுந்தரம், பூண்டி கே.கலைவாணன், குன்னம் சி.ராஜேந்திரன், க.வைரமணி, நிவேதா எம்.முருகன், என்.கௌதமன், கா.அண்ணாதுரை, கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நிறைவாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையுரையும், உங்களில் ஒருவனான நான் சிறப்புரையும் ஆற்றுகிறோம். இப்பயிற்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதோடு திமுகவினராகிய உங்களின் பணிகள் முடிவடைந்து விடுவதில்லை.

உங்கள் வாக்குச்சாவடிக்குட்பட்ட தெருக்கள் தோறும் திண்ணைகள் தோறும் பரப்புரையை கழகத்தின் சாதனைகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்திலும் வரலாம்; முன்கூட்டியும் வரலாம். எப்போது வந்தாலும் சந்திக்கின்ற வலிமையுடன் நாம் இருக்க வேண்டும் என்ற வகையில் உங்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. ஜனநாயகம் காத்திடும் வீரர்களான திமுகவினரே ஆயத்தமாவீர். ‘இந்தியா’வின் வெற்றி நம் கையில் என்பதில் நம்மை விடவும் உறுதியாக இருக்கும் அரசியல் எதிரிகள், அவதூறுகளைப் பரப்பிடவும், நெருக்கடிகளை உருவாக்கிடவும் தொடர்ச்சியான செயல்திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள்.

எத்தகைய சவால்களையும் வென்று சாதனைப் படைத்திடும் ஆற்றல் திமுகவினருக்கு உண்டு. கலைஞர், ‘உரலுக்குள் நெல்மணிகள் உலக்கைபட்டு உமி வேறாய், அரிசி வேறாய் பிரிவது போல்’ எனத் தனது சங்கத் தமிழ் நூலில் எழுதியிருப்பார். நம் கழகத்தினர் களத்தில் கவனம் செலுத்திப் பணியாற்றும்போது, அரசியல் எதிரிகளை உமியென ஊதித் தள்ளி, அரிசியெனும் வெற்றியை அள்ளிக் குவிக்கலாம். டெல்டாவில் அதற்கான முதல் களம் அமைந்துள்ளது. மற்ற மண்டலங்களிலும் விரைவில் உங்கள் அன்பு முகம் காண்பேன். நாற்பதும் நமதே, நாடும் நமதே. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்