முன்பதிவு செய்த பயணிகள் ரயிலில் ஏற முடியாமல் இருக்கைகள் கிடைக்காமல் தவிப்பது இது முதல் முறை அல்ல : திமுக எம்.பி. தயாநிதி மாறன் காட்டம்

சென்னை: சென்னை – ஹவுரா ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாதவர்கள் ஏறியதால் முன்பதிவு செய்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நேற்று இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுரா புறப்பட்ட ரயிலில் முன்பதிவு செய்த பல பயணிகள் ஏற முடியவில்லை. முன்பதிவு பெட்டிகளை முன்பதிவு செய்யாத பயணிகள் ஆக்கிரமித்ததால் முன்பதிவு செய்து காத்திருந்தவர்கள் தவித்துள்ளனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புகார் கூறப்படுகிறது.

மேற்கண்ட சம்பவம் குறித்து திமுக.எம்.பி. தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள செய்தியில்,”சென்னை – ஹவுரா ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் ஏற முடியவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. முன்பதிவு செய்த பயணிகள் ரயிலில் ஏற முடியாமல் இருக்கைகள் கிடைக்காமல் தவிப்பதும் இது முதல் முறை அல்ல. ரயில் சேவை பரிதாபகரமான நிலையில் இருப்பதற்கு ரயில்வே அமைச்சகத்தின் அலட்சியமான செயல்பாடே காரணம். முன்பதிவு பயணிகள் பயணிக்க முடியாதது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாது, பாதுகாப்பு பிரச்சனையையும் ஏற்படுத்தக் கூடியது. ஹவுரா ரயில் பயணிகளின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தெற்கு ரயில்வே விசாரணை நடத்த வேண்டும்.எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகளை தடுக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை