மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜவுக்கு ‘0’ 39 தொகுதிகளை வாரி சுருட்டும் திமுக கூட்டணி: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பில் தகவல்

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும், அதிமுக மற்றும் பாஜவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் ஏபிபி-சி வோட்டர் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் இந்தியா கூட்டணி சார்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கட்சிகள் மற்றும் பாஜ இடையே இழுபறி நீடித்து வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரசுக்கு 9 இடங்கள் + புதுச்சேரி சேர்த்து 10 இடங்கள், இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு தலா ஒரு தொகுதி, மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு மாநிலங்களவை தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

தொகுதி உடன்பாடு ஏற்பட்டதால் வேட்பாளர்கள் தேர்வில் திமுக கூட்டணி கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கூட்டணிக்காக பாமக, தேமுதிக மற்றும் சிறிய கட்சிகளுடன் பாஜ, அதிமுக பேரம் பேசி வருகிறது. இந்நிலையில், ஏபிபி-சி வோட்டர் சார்பில் தேர்தலுக்கு முந்தைய 2024 மக்களவை தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 தொகுதிகளையும் வாரி சுருட்டும்.

அதிமுக மற்றும் பாஜவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது.திமுக கூட்டணிக்கு 54.7% வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 27.8% வாக்குகளும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 10.9% வாக்குகளும், மற்ற கட்சிகள் 6.8% வாக்குகளும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 39ல் 38 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், இந்த முறை 39 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று கருத்து கணிப்பு வெளியாகி உள்ளன. குறிப்பாக பாஜவுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

Related posts

மிலாது நபி விடுமுறை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்