திமுகவில் குற்றவாளிகளுக்கு இடமில்லை: அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்

புதுக்கோட்டை: ‘திமுகவில் குற்றவாளிகளுக்கு இடமில்லை’ என்று அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தலைமைச் செயலாளர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை முதன்மைச் செயலாளராக இருந்தவர் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மரியாதை நிமித்தமாக அவர் ஆளுநரை சந்திக்க வேண்டும். அதனால் அவர்கள் சந்தித்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு வேறு ஒன்றும் இல்லை.

வியூகங்களுக்கும் கற்பனைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அவர் பதவியில் தொடர்வது குறித்து ஒன்றிய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். பாலியல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகியும் அவரது தந்தையும் உயிரிழந்த இரு வேறு சம்பவங்களை ஒன்றாக முடித்து போட்டு பார்க்கிறார்கள். ஆனால் அது வேறு சம்பவம். இது வேறு சம்பவம். இதில் ஆளும் கட்சி எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவர் மருத்துவமனையில் இருந்து உள்ளார். அவர் கைதாவதற்கு முன்பாகவே விஷம் சாப்பிட்டுள்ளார் என்ற குறிப்பு உள்ளது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இன்னொருவர் ஸ்கூட்டர் விபத்தில் இறந்துள்ளார். இரண்டும் வெவ்வேறு. ஆனால் இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முடித்து போட்டு பார்க்கிறார்கள். இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் போடுகின்ற முடிச்சி தான். எங்களைப் பொறுத்தவரை எந்த குற்றவாளியையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை தண்டிக்கின்ற முதல் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். எங்கள் கட்சியில் குற்றவாளிகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம். தெரிந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கக்கூடிய இயக்கம் திமுக. இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர், சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவது குறித்து திருச்சி எஸ்பி புகார் அளித்துள்ளது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறும் பொழுது வழக்கு தொடர்வது என்பது இயற்கை தான். அவர் கூறிய கருத்துக்களால் வழக்கு தொடர்ந்து உள்ளார் என்றார்.

Related posts

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு