திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

புழல்: திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சோழவரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அபிஷா ப்ரியா வர்ஷினி. இவரது கணவர் ஜெகன் (38). சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 15ம் தேதி 2 பைக்குகளில் மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசினர்.

இதேபோல், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் லாரிகள் நிறுத்தும் இடத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய அந்த கும்பல், சத்தம் கேட்டு வெளியே வந்த லாரி ஓட்டுநர் சிவா என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.

தொடர்ந்து, சிறுணியம் பகுதியில் ஹாலோ பிளாக் கற்கள் மற்றும் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வரும் சரண்ராஜ் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார் கண்ணாடிகளை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் சோழவரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஆந்திராவில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி டியோ கார்த்திக் (21), குதிரை சுரேஷ் (21) மற்றும் குண்டு கோபி (25) ஆகிய 3 பேரை ஏற்கனவே கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த காந்தி நகரை சேர்ந்த சந்திரன் (26) என்பவரை சோழவரம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

சென்னை காசிமேட்டில் கஞ்சா டெலிவரி: 2 பேர் கைது

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்