திமுக சார்பில் போட்டியிட 2,984 பேர் விருப்ப மனு: வரும் 10ம் தேதி நேர்காணல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 2,984 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக மீதியுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட கூடுதலான தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது.

ஏராளமானோர் ஆர்வமுடன் விண்ணப்பங்களை வாங்கினர். தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. போட்டியிட விரும்புவோர் ₹50,000 கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுக்களை அளித்து வந்தனர். மார்ச் 7ம் தேதி வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது. அதன்படி இறுதி நாளான நேற்று ஏராளமானோர் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை அளித்தனர்.

மாலை 6 மணி வரை பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் மத்திய சென்னை தொகுதியில் மீண்டும் தயாநிதி மாறன் எம்பி போட்டியிட வேண்டும் என்று திமுக வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி விருப்ப மனு தாக்கல் செய்தார். அப்போது ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மீண்டும் பெரும்புதூர் தொகுதியில் ேபாட்டியிட விருப்ப மனு அளித்தார்.

தென்சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட தமிழச்சி தங்கபாண்டியன் விருப்ப மனு அளித்தார். டசென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட கலாநிதி வீராசாமியும், நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிட ஆ.ராசாவும் விருப்ப மனு தாக்கல் செய்தனர். இதே போல ஏராளமானோர் விருப்ப மனுக்களை அளித்தனர். இறுதி நாள் என்பதால் அண்ணா அறிவாலயம் நேற்று தொண்டர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது.

திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 2,984 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் 335 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமை கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் – வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிகிறார்.
நேர்காணலின்போது, அந்தந்த நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மட்டுமே நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்