தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 18,000 போலீசார் குவிப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை முழுவதும் கூடுதல் கமிஷனர்கள் மேற்பார்வையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடஉள்ளனர் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தீபாவளி 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கர்க், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் 4 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள், 24 உதவி கமிஷனர்கள் தலைமையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:

* தீபாவளி பண்டிகையின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணி நடைபெறும். தி.நகரில் 7, வண்ணாரப்பேட்டை 3, கீழ்ப்பாக்கம் 3 மற்றும் பூக்கடையில் 4 என மேற்கூறிய 4 இடங்களிலும் மொத்தம் 17 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், நேரடியாகவும் 21 பைனாகுலர் மூலமும் கண்காணித்து, குற்றச் செயல்கள் நடக்காமல் தடுத்து வருகின்றனர்.

தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை பகுதிகளில் மொத்தம் 5 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் 10 தற்காலிக உதவி மையங்கள் அமைத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தும், குற்றவாளிகள் நடமாட்டம் கண்காணித்தும், கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள், சிறுமியர்களை உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தி.நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதியில் கூடுதலாக 42 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

* தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதியில் அகன்ற எல்இடி திரையின் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேற்கூறிய 4 இடங்களிலும், காவல் ஆளிநர்கள் மூலம் 19 ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 17 இடங்களில் ஸ்பீக்கர்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தி.நகர் மற்றும் பூக்கடை பகுதியில் தலா 2 என 4 டிரோன்கள் மூலம் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகள் கண்காணிக்கப்படுகிறது.

* பழைய குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதற்காக செல்போன் செயலி மூலம் காவல் ஆளிநர்கள் சுழற்சி முறையில், காவல் குழுக்களாக பிரிந்து கண்காணித்தும், வாட்ஸ் அப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்து, குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகளை திருடப்படாமல் தடுக்க கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக கட்டிக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண்காவலர்கள் ஈடுபடுவார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு, மாதவரம் மற்றும் கே.கே.நகர் ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது