தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பு கூடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

தர்மபுரி : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிக்கும் கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பது குறித்து ஆலோசனை வழங்கினர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி நகரில் தற்காலிகமாக திருமண மண்டபங்கள், வீடுகள், கடைகளில் இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்யும் பணி பஸ் நிலையம், நேதாஜி பைபாஸ் ரோடு, எஸ்வி ரோடு, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்த இடங்களுக்கு நேற்று தர்மபுரி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று இனிப்பு மற்றும் கார வகைகள் உற்பத்தி செய்வதை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, தர்மபுரி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் கூறியதாவது: உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றுகள் இல்லாமல் உணவு பொருட்கள், தீபாவளி பலகாரங்கள் இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது, விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இனிப்பு, பலகாரம் தயாரித்து விற்பனை செய்பவர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு துறையில் பெற்ற லைசென்ஸ் சான்றிதழை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். உணவு தயாரிக்கும் பணியாளர்கள் தன் சுத்தம் பராமரிப்புடன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல் எண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும்.

தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப்படும் குடிநீர் பாதுகாக்கப்பட்ட குடிநீராக இருக்க வேண்டும். உணவு பொருள் பொட்டலம் இடும் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, முடிவு தேதி, தயாரிப்பு முகவரி, நுகர்வோர் புகார் தொடர்பு எண் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும். உணவுப் பொருட்கள், இனிப்பு காரங்களில் நிறமூட்டிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக சேர்ப்பதோ, பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்துவதோ, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் உபயோகப்படுத்துவதோ, அச்சிடப்பட்ட பழைய செய்தித்தாள்களில் காட்சிப்படுத்துவதோ, பொட்டலம் இடுவதோ, விநியோகிப்பதோ கூடாது. சமையல் எண்ணெய் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது.

உணவு பொருள், இனிப்பு காரம் தயாரிப்பாளர்கள் விற்பனையாளர்கள் உபயோகப்படுத்தக்கூடிய புட் கிரேடு கண்டெய்னர்கள், கவர்கள் மற்றும் எழுத்துக்கள் அச்சிடப்படாத பிரவுன் கவர்கள், அலுமினிய பாக்ஸ்கள், மஞ்சப்பை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடிய பொருட்களையே உபயோகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்