மாவட்ட செயலாளருக்கு எதிராக போர்க்கொடி தூக்க தயாராகும் இலை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கிணறு வெட்டும் பணியை விரைந்து முடிக்கணும்னு மனுவோட போன மக்கள் கதை வடிவேலு கிணத்தை காணோம் காமெடி பாணியில ஆகி போச்சாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்ட மலை கிராமங்களில் அரசு திட்டங்கள்ல நடக்கிற முறைகேடு பெரும்பாலும் வெளியே தெரியறதில்ல.. அந்த வகையில வெயிலூரை அடுத்துள்ள குருவான மலை கிராமத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில சிறு,குறு விவசாய நிலங்களில் கிணறு வெட்டும் பணி நடந்துச்சாம்.. மலை கிராமத்திலும், அதை ஒட்டிய பள்ளமான கொல்லையிலும் இலை கட்சி ஆட்சியின்போது இந்த பணிகள் தொடங்கிச்சாம்.. ஆனா அந்த பணிய கான்ட்ராக்டர் பாதியிலே கை விட்டுட்டாராம்.. இதனால அதிர்ச்சி அடைஞ்ச கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அத்தியான ஊராட்சி தலைவரிடம் முறையிட்டாங்களாம்.. அதோட கலெக்டரிடமும் மனு கொடுத்தாங்களாம்.. கலெக்டரும் களஆய்வுக்கு போயிட்டு, கிணறு வெட்டும் பணியை விரைந்து முடிக்கணும்னு அதிகாரிங்களுக்கு உத்தரவிட்டாராம்.. ஆனாலும் பணி நடக்கவே இல்லையாம்..
இப்போ மீண்டும் கலெக்டர் அலுவலக கதவை அந்த மக்கள் மீண்டும் தட்டியுள்ளார்களாம்.. இந்த திட்ட பணியில லட்சக்கணக்குல முறைகேடு நடந்திருக்கிறதாக தகவல் வெளியான நிலையில், இந்த விவகாரம் தணிக்கை அதிகாரி கையில் விசாரணைக்காக காத்திருக்கிறதாம்.. இது தெரிந்த கிராம மக்கள், என்னடா இது சினிமாவுல வர்ற ‘வடிவேலு கிணத்த காணோம் கதையாக நம்ம கதையும் ஆகி போச்சேனு’ புலம்பி வர்றாங்களாம்.. என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத தேசியக்கட்சியின் மாநில தலைவர் பதவியை பிடிக்கும் கோதாவில் நாட்டாமை தலைவர் குதிச்சிட்டதா ஆதரவாளர்கள் பேசிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு தேசிய கட்சி தலைமை மலையான மாநில தலைவரை மாற்றும் திட்டத்தில் இருக்கிறது.. அவரது பேச்சால் தான் இலை கட்சியின் கூட்டணி டமால் ஆகிடுச்சு.. இதனால் ஒரு தொகுதி கூட கிடைக்கலை.. எனவே இலை கட்சியை சரி கட்ட மலையான தலைவரை மாற்றி விடுவது என்ற யோசனையில் இருக்கிறதாம்.. ஏற்கனவே சமத்துவ நடிகர் மக்களவை தேர்தலுக்கு முன்பாக தனது கட்சியை கலைத்து விட்டு தேசிய கட்சியில் ஐக்கியமாயிட்டாரு.. தேசிய கட்சியும் அவரது மனைவிக்கு போட்டியிட விருதுநகரில் வாய்ப்பு வழங்கியது. நடிகரான கணவரும், மனைவியும் சேர்ந்து பிரசாரம் செய்த போதிலும் எடுபடவில்லை.. தோல்வி தான் மிச்சம். இந்நிலையில் மாநில தலைவர் பதவி கோதாவில் நடிகரும் குதிச்சிருக்காராம்.. முன்பு கட்சி நடத்திய போது அனைத்து நிகழ்வுகளுக்கும் அறிக்கை விடுவார். அதேபோல நேற்று கேரள மாநிலத்தில் நடந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் அறிக்கை விட்டிருக்கார்.. கட்சியின் பெயரைப் போட்டு தமிழ்நாடு என்று இருக்கிறது அந்த அறிக்கை. வழக்கமாக கட்சியின் தலைமை தான் அறிக்கை விடுவது வழக்கம். ஆனால் நடிகர் தனிக் கட்சி நடத்தியவராச்சே….அந்த வகையில் அறிக்கை விட்டிருக்கார். சீக்கிரமே நாட்டாமை தலைவர் பதவியை பிடிப்பார்.. அதற்கு முன்னோடி தான் இந்த அறிக்கை என்கின்றனர் அவரது தென் மாவட்ட ஆதரவாளர்கள்.. தென் மாவட்டத்திலிருந்து 2வது நபர் கோதாவில் குதித்திருப்பதால் அக்கட்சி வட்டாரத்தில் ஆதரவு பிரசாரம் சூடு பறக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பனியன் கம்பெனி பெண் தொழிலாளியிடம் 5 லட்சம் ஆட்டைய போட்டதுடன் மிரட்டலும் விடுத்திருக்கிறாராமே போலீஸ் அதிகாரி…’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘திருப்பூர் எஸ்.வி. காலனியை சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி, அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறாராம்.. இவர், தனது மகன் திருமண செலவுக்காக ரூ.5 லட்சம் பணம் சேமித்து வைத்திருந்தாராம்.. இதை, தெரிந்துகொண்ட உடன் பணிபுரியும் தொழிலாளி ஒருவர், பணத்தை வட்டிக்கு விட்டால் கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும்னு ஆசைவார்த்தை கூறியிருக்கிறாரு… இதை நம்பிய அந்த பெண் தொழிலாளி ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டாராம்.. ஆனால், 6 மாதம் ஆகியும் பணமும் வரவில்லை, வட்டியும் வரவில்லையாம்.. இதனால், ஏமாந்து போன அந்த பெண், இதுபற்றி திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றாராம்.. ஆனால், அங்கிருந்த போலீஸ் அதிகாரி, இவரை மிரட்டி அனுப்பிவிட்டாராம்.. ஏன் இப்படி விரட்டுகிறார்…? என விசாரித்தபோது, ரூ.5 லட்சம் பணத்தை பெற்றுச்சென்ற அந்த நபர், இவருடன் அன்கோ போட்டுள்ளது தெரியவந்திருக்கு… இதனால், பதறிப்போன அந்த பெண், மீண்டும் போலீஸ் அதிகாரியிடம் சென்று., ‘‘ஐயா, எப்படியாவது பணத்தை திருப்பிக் கொடுங்கள்… எனது மகன் திருமண செலவுக்கு வேண்டும்…” என மன்றாடி இருக்கிறாரு… ஆனால், அந்த போலீஸ் அதிகாரியோ ரூ.70 ஆயிரம் பணத்தை மட்டும் தூக்கிப்போட்டு வேண்டுமென்றால் எடுத்துட்டுப்போ…. என மிரட்டிவிட்டாராம்.. பணத்தை பறிகொடுத்த அந்த பெண், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கும், திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆபீசுக்கும் நடையாய் நடக்கிறார்…’’ என முடித்தார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியில் மாவட்ட செயலாளருக்கு எதிராக போர்க்கொடி தூக்க நிர்வாகிகள் முடிவு செய்துட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாநகரில் இலை கட்சியில் புதிதாக கடைசியில் முடியும் வாசன் என்பவர் சமீபத்தில் மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். குக்கர் கட்சியில் இருந்த இவர், இலை கட்சிக்கு வருவதற்கு முன் சேலத்தில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவரை பிடித்து அவர் மூலம் சேலத்துக்காரரை சந்தித்தாராம்… அதன்பின்னர் தான், அவருக்கு மலைக்கோட்டை மாநகரில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதாம்.. கட்சியில் தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது, கட்சியில் சுறுசுறுப்பாக இருப்பது போல் நடந்துகொள்கிறாராம்… முக்கியமாக, தனக்கு மேலிடத்து செல்வாக்கு இருக்கு எனக்கூறி, நிர்வாகிகளை தனது கட்டுக்குள் வைத்துள்ளாராம்.. ஆனால் இவரது நடவடிக்கைகள் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பிடிக்கவில்லையாம்.. இதனால் விரைவில், மாவட்ட செயலாளருக்கு எதிராக கட்சிக்குள்ளேயே போர்க்கொடி தூக்க முடிவு செய்துவிட்டார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே சொத்துத் தகராறில் துப்பக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு

கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா?: ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்