சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பை கணிக்கும் தானியங்கி கருவிகள் பொருத்தப்படும்: அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழைவெள்ள பாதிப்பை கணிக்கும் தானியங்கி கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நீர்சார் பேரிடர்கள் அதிகம் நிகழக்கூடிய மாவட்டங்களில் வசிப்பதாக ஆற்றல், சுற்றுச்சூழல், நீருக்கான கவுன்சில் என்ற அமைப்பு 2021ம் ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதிலும் இந்திய தென் மாநிலங்கள் தான் உச்சக்கட்ட காலநிலை நிகழ்வுகளால் பாதிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன. அத்துடன், இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் வெள்ளப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் அதேவேளையில், மத்திய இந்தியாவின் பகுதிகள் உச்சக்கட்ட வறட்சியை எதிர்கொள்கின்றன. வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு போன்றவை இயற்கையான நிகழ்வுகள்தான். ஆனால், அந்த வெள்ளம் மனித தலையீடுகளால் நிலத்தின் சூழலியல் சிதைக்கப்படும்போது தான் தொடர்ச்சியான பேரிடர்களாக மாறுகின்றன என ஆற்றல், சுற்றுச்சூழல், நீருக்கான கவுன்சிலின் அறிக்கை கூறுகிறது.

தமிழ்நாடு தலைநகரான சென்னையில் 2015ல் ஏற்பட்ட வெள்ளம், 2019ம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சி ஆகியவற்றிலிருந்து, சென்னை பெருநகரம் காலநிலை நெருக்கடிக்கான உலகளாவிய விவாதங்களில் கவனம் பெற்றுள்ளது. புவி வெப்பமடைவதாலும் வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகமாவதாலும், தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகளுக்கு வழிவகுத்து, நகரங்களில் வெள்ளப்பெருக்கு என்பது இனி ஒவ்வோர் ஆண்டும் நடக்கக்கூடிய பொதுவான நிகழ்வாக மாறலாம். நகரங்களில் ஏற்படும் காலநிலை நெருக்கடி அதிக மழைப்பொழிவு, துரிதப்படுத்தப்பட்ட கடல் மட்ட உயர்வு, வெள்ளம், கோடையில் சராசரியை விட அதிக வெப்பநிலை மற்றும் தீவிர வெப்ப அலை நிகழ்வுகள், கடுமையான வறட்சி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். குறுகிய காலகட்டத்தில் அதிதீவிர மழைப்பொழிவை எதிர்கொள்வதன் விளைவாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. போக்குவரத்து பாதிப்பு, நீர் மூலம் பரவும் நோய்கள் போன்றவற்றின் அபாயங்களும் பல்வேறு சிரமங்களுக்கு மக்களை ஆளாக்குகின்றன. தீவிர நகரமயமாக்கல் இதற்கொரு காரணமாக சொல்லப்பட்டாலும் அதுமட்டுமே காரணமில்லை. நகரத் திட்டமிடுதல், இயற்கையோடு இணைந்து போகாத பலவீனமான கட்டமைப்புகள் போன்றவையும் இவற்றுக்கு காரணமாகச் சொல்லப்படுகின்றன.

இதனிடையே, சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூரில் வெள்ளத்தை கணிக்கும் தானியங்கி கருவிகள் பொருத்தப்பட உள்ளது. இன்னும் 10 மாதங்களில் இக்கருவிகள் பொருத்தப்படும். இதற்கான உலக வங்கி நிர்வாகிகளுடனான கூட்டம் கடந்த மாதம் நடந்தது. அதனை தொடர்ந்து 86 இடங்களில் தானியங்கி மழைமானி கருவிகள், 14 இடங்களில் தானியங்கி வானிலை கருவிகள் மற்றும் 141 இடங்களில் வெள்ளத்தை கணிக்கும் தானியங்கி கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெள்ளத்தை கணிக்கும் முன்னறிப்பு கருவிகள், இடம் சார்ந்த ஆதார் அமைப்பு கருவியை இணைத்து நிறுவப்பட உள்ளது. இதனை வெள்ளத்தை கண்காணிக்கும் மையங்களில் சென்னை ரிப்பன் பில்டிங் உள்பட பிற மாவட்டங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் 10 மாதங்களில் நடைபெறும். 86 இடங்களில் தானியங்கி மழைமானியும், 14 இடங்களில் தானியங்கி வானிலை கருவிகள் மற்றும் 141 வெள்ளத்தை கணிக்கும் தானியங்கி கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, வெள்ள அபாய எச்சரிக்கையானது மழையின் அளவு, நீர் தேக்கங்களின் நீர் இருப்பின் அளவுகளை நேரடியாக கணக்கெடுத்து அதை கண்காணித்து வந்தனர். அதை தொடர்ந்து தானியங்கி கருவிகள் பொருத்தப்பட்டு அதன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு உலக வங்கியிடம் இருந்து நிதிப்பெறப்பட உள்ளது. வெள்ளக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குறித்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு உதவும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

வெள்ளப்பாதிப்புகளின் முக்கிய பகுதியாக உள்ள பள்ளிக்கரணை மற்றும் முடிச்சூர் பகுதிகளில் பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் பெற முடியும். அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படலாம். சென்னை மாநகராட்சி, நகர நிர்வாகத்துறை மற்றும் நிர்வாக வருவாய் ஆய்வாளர் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே சென்னையில் 30க்கும் மேற்பட்ட தானியங்கி மழைமானிகள் உள்ள நிலையில் தற்போது மேலும் அமைக்கப்பட உள்ள தானியங்கிய மழைமானிகளால் இன்னும் வெள்ளம் மற்றும் மழை குறித்த தகவல்கள் கூடுதலாக பெறப்படும். மேலும் 72 மணி நேரத்திற்கு முன்பாக வெள்ள பாதிப்பு குறித்து கண்டறியப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் அதிகாரிகள் எந்தெந்த பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுகிறது என கண்டறியப்பட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை வழங்குவார்கள். சென்னையில் உள்ள 200 வார்டு கவுன்சிலர்கள், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் உதவி பொறியாளர்கள் இந்த தகவல்களை பெற்று அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பார்கள். இந்த நடைமுறை ஏற்கனவே இருக்ககூடிய தகவல்களின் அடிப்படையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதோடு சேர்த்து இந்த பகுதிகளில் பொருத்தப்படும் கருவிகள் மூலம் கூடுதல் தகவல்கள் முன்னறிவிப்பாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூரில் வெள்ளத்தை கணிக்கும் தானியங்கி கருவிகள் இன்னும் 10 மாதங்களில் பொருத்தப்படும். 86 இடங்களில் தானியங்கி மழைமானி கருவிகள், 14 இடங்களில் தானியங்கி வானிலை கருவிகள், 141 இடங்களில் வெள்ளத்தை கணிக்கும் தானியங்கி கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை