மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்வி கடன் முகாம் கல்வி கடனை 15 ஆண்டுகள் வரை மாணவர்கள் திரும்ப செலுத்தலாம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும், மாபெரும் கல்வி கடன் முகாமினை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: கலைஞர் நூற்றாண்டு விழா கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி 2023-24ம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 161 கல்லூரிகளில் 7,500 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 81 கல்லூரியை சேர்ந்த 2,500 மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 10 தேசிய வங்கிகளில் 609 மாணவர்களுக்கு ரூ. 84.02 கோடி கல்விக் கடனாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் 27 கல்லூரிகளை சேர்ந்த 930 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 204 மாணவர்களுக்கு ரூ.13.93 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. பி.இ, எம்.பி.பி.எஸ்., நர்சிங் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு கல்வி கடன்கள் வழங்கப்படுகிறது. கல்வி கடனானது, இந்தியாவிற்குள் பயிலும் மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலும், வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் மாணவர்களுக்கு ரூ.1.50 கோடி வரை வழங்கப்படுகிறது.

இதில் ரூ.7.50 லட்சம் வரை எவ்வித உத்திரவாதமும் இன்றி மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு பெறும் கல்வி கடனை மாணவர்கள் 15 ஆண்டுகள் வரை திரும்ப செலுத்தலாம். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று இதுவரை, தொழில் துறையில் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் 241 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி முதலீடுகளை ஈர்த்து 4,15,252 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் மாணவர்களுக்கு கல்வி கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு பதிவு செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், ஐஓபி வங்கியின் மூலமாக 66 மாணவர்களுக்கு ரூ.4.39 கோடியும், கனரா வங்கியின் மூலமாக 50 மாணவர்களுக்கு ரூ.2.23 கோடி, இந்தியன் வங்கியின் மூலமாக 40 மாணவர்களுக்கு ரூ. 3.63 கோடி, ஐசிஐசிஐ வங்கியின் மூலமாக 15 மாணவர்களுக்கு ரூ.1.2கோடி,

ஐடிபிஐ வங்கியின் மூலமாக 5 மாணவர்களுக்கு ரூ.75 லட்சம், யூனியன் வங்கி மூலமாக 13 மாணவர்களுக்கு ரூ.60 லட்சம், சென்ட்ரல் பேங்க் மூலமாக 5 மாணவர்களுக்கு ரூ.50 லட்சம், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலமாக 2 மாணவர்களுக்கு ரூ.22 லட்சம், எச்டிஎப்சி வங்கியின் மூலமாக ஒரு மாணவருக்கு ரூ.19 லட்சம், எஸ்பிஐ வங்கியின் மூலமாக மூன்று மாணவர்களுக்கு ரூ.11 லட்சம், பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி மூலமாக நான்கு மாணவர்களுக்கு 4 மாணவர்களுக்கு ரூ.11 லட்சம் என மொத்தம் 204 மாணவர்களுக்கு ரூ.13.93 கோடி கல்வி கடன்கள் வழங்கப்பட்டது.

இந்த முகாமில், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் மணி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயாகருணாகரன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் ஆராமுதன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் சண்முகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் தண்டபாணி, மறைமலைநகர் நகர்மன்ற துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன், காஞ்சிபுரம் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ராஜாராமன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி