சுற்று வட்டார கிராமங்களில் பூசணி அறுவடை தீவிரம்

*மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் பூசணி அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களான நெகமம், கோமங்கலம், வடக்கிபாளையம், டி.நல்லிகவுண்டன்பாளையம், சூலக்கல், ஜமீன்முத்தூர், பொன்னாபுரம், கோட்டூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளை பூசணி அதிகளவில் பயிரிடுப்படுகிறது. மழை காலம் மட்டுமின்றி வெயிலின் தாக்கம் இருக்கும் போதும் பூசணி பயிரிடுவதில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.

பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலும், சில நாட்களை தவிர பிற நாட்களில் மழையின்றி வெயிலின் தாக்கமே அதிகமானது. இதனால், அந்நேரத்தில் பூசணி பயிரிடுவது குறைந்ததுடன், அதன் விளைச்சலும் மிகவும் குறைந்தது. அதன்பின் கடந்த மே மாதம் பெய்த கோடை மழைக்கு பிறகு சுற்றுவட்டார கிராமங்களில் பூசணி சாகுபடி அதிகமாக இருந்தது.

அதன்பின் கடந்த ஜூலை மாதம் பெய்த தென்மேற்கு பருவமழையால், பூசணிக்காய் நல்ல விளைச்சலடைந்தது. இதையடுத்து பல்வேறு கிராமங்களில் பூசணிக்காய் அறுவடை துவங்கப்பட்டது. தற்போது பெரும்பாலான விளை நிலங்களில் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், மார்க்கெட்டுக்கு தற்போது பூசணி வரத்து மேலும் அதிகரிக்க துவங்கியது.

மேலும், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும், பெரிய அளவிலான பூசணிக்காய்கள் விற்பணைக்காக மார்க்கெட்டுக்கு அதிகளவு கொண்டு வரப்படுகிறது. இதனால், அதன் விலை சரிய துவங்கியுள்ளது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.35 வரை என கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரத்து அதிகரிப்பால், மொத்த விலை ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.18க்கும். சில்லரை விலைக்கு ரூ.18 முதல் ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை