மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் மாவட்டத்தில் 5.43 லட்சம் பேர் பயன்

*கலெக்டர் தகவல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம், 5.43 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர் என கலெக்டர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பாக பணியாற்றிய இடைநிலை சுகாதார பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், நோய் ஆதரவு சிகிச்சையாளர்கள், தொற்றுநோய் செவிலியர்கள் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் சரயு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். பின்னர், கலெக்டர் சரயு கூறியதாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்தார். தற்போது இத்திட்டம் துவங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இத்திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடைநிலை சுகாதார பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், நோய் ஆதரவு சிகிச்சையாளர்கள், தொற்றுநோய் செவிலியர்களால் தன்னலமற்ற சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், தற்போது வரை 2 லட்சத்து 73 ஆயிரத்து 538 நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் சிகிச்சையும், 1 லட்சத்து 33 ஆயிரத்து 776 நபர்களுக்கு நீரிழிவு நோய் சிகிச்சை பரிசோதனையும், 1 லட்சத்து 11 ஆயிரத்து 806 நபர்களுக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும் உள்ளவர்களுக்கான பரிசோதனையும், 3 ஆயிரத்து 373 நபர்களுக்கு புற்றுநோய் பரிசோதனையும், 10 ஆயிரத்து 527 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும், 10 ஆயிரத்து 142 நபர்களுக்கு இயன்முறை மருத்துவம் என மொத்தம் 5 லட்சத்து 43 ஆயிரத்து 162 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் வீட்டிலேயே பரிசோதனை செய்து, மாத்திரைகள் வழங்குவதன் மூலம், நோய் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கி, சிறப்பாக பணியாற்றிய இடைநிலை சுகாதார பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், நோய் ஆதரவு சிகிச்சையாளர்கள், தொற்றுநோய் செவிலியர்கள் என மொத்தம் 14 நபர்களுக்கு தற்போது பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியின் போது, சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ரமேஷ்குமார், டாக்டர் வித்யா, கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு