ராகுலுக்கு இடையூறு

இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு தடைகளையும், பிரச்னைகளையும் சந்தித்து வருகிறது. மணிப்பூரில் யாத்திரை தொடங்கும் என்று அறிவித்த நாள் முதல் ராகுல் யாத்திரைக்கு பிரச்னை மேல் பிரச்னை. அதுவும் அசாம் மாநிலத்தில் 8 நாட்கள் யாத்திரை நடக்கும் என்று அறிவித்தபோதே தெரிந்து விட்டது அங்கு நிச்சயம் பிரச்னை உருவாகும் என்று. அந்த அடிப்படையில் ராகுல் யாத்திரை செல்லும் இடம் எல்லாம் பிரச்னை உருவாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முதல் இரண்டு நாட்கள் மக்கள் கூட்டம் குவியத்தொடங்கியதும் அசாம் பாஜ முதல்வர் ஹிமந்தாபிஸ்வா சர்மா அதிர்ந்து போய்விட்டார். அதன்பின் ராகுல் யாத்திரையை பாஜ தொண்டர்கள் முற்றுகையிட தொடங்கி விட்டனர். சட்டம், ஒழுங்கு காரணம் காட்டி பல இடங்களில் ராகுல் யாத்திரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. யாத்திரையை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள், விளம்பரங்கள் கிழித்து எறியப்பட்டன.

இதை விட எல்லாம் மிகவும் முக்கியமாக ராகுல் யாத்திரையில் பங்கேற்ற வாகனங்கள் நொறுக்கப்பட்டன. இதுபற்றி காங்கிரஸ் தரப்பில் பலவிதமான புகார்கள் அளித்தும் அசாம் மாநில போலீசார் கண்டுகொள்ளவில்லை. கோயிலில் வழிபாடு நடத்த கூட அனுமதிக்கவில்லை. ராகுல்காந்தி உயர்பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர். அவருக்கு உரிய பாதுகாப்பு மாநில அரசின் சார்பில் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் ராகுல்காந்திக்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதில் அசாம் மாநில பாஜ அரசு அத்தனை அலட்சியம் காட்டியது. ஒருகட்டத்தில் ராகுல்காந்தி சென்ற பஸ்சைக்கூட தாக்க முயன்றார்கள். ராகுல் பஸ்சை விட்டு கீழே இறங்கி அவர்களுடன் பேச முயன்றார். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. ராகுல் மேல் தாக்குதல் நடத்தக்கூட அந்த கும்பல் தயாராக இருப்பதை அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக பஸ் ஏற்றி அனுப்பி வைத்தனர். அப்போது கூட ராகுல் அதிர்ந்து போய்விடவில்லை. இப்படித்தான் இருப்பார்கள் என்பதை அறிந்த அவர், அவர்களை நோக்கி பறக்கும் முத்தங்களை கொடுத்தபடி அன்பு செய்தி பரவவிட்டபடி கடந்து சென்றார். அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தி. அங்கு ராகுல் நேற்று யாத்திரை நடத்த வேண்டும். ஆயிரக்கணக்கான பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் ராகுல் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் வீதிமுழுக்க திரண்டு நின்றார்கள். ஆனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி ராகுல் யாத்திரை கவுகாத்தி நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு விட்டது. ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் பேரிகார்டுகளை தாண்டிச்சென்று போலீசாருடன் மோதலில் ஈடுபட்டார்கள். ஆனால் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவுதான் அங்கு வென்றது.

ராகுல் யாத்திரை கவுகாத்தி நகருக்குள் நுழையாமல் புறவழிச்சாலை வழியாக கடந்து செல்ல வேண்டியது வந்தது. அங்கு பல்கலை மாணவர்களுடன் ராகுல் உரையாட இருந்தார். அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நாளை வரை அவர் அசாம் மாநிலத்தில் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய முதல்வர் ஹிமந்தா உத்தரவிட்டுள்ளார். அதற்கெல்லாம் அசரும் மனிதர் அவர் இல்லை. ஏனெனில் அவர் உறுதியானவர். இந்த யாத்திரை ராகுலை இன்னும் புடம் போட்டு அதிக உறுதியாக்கும் என்பது இப்போதே தெரிந்து விட்டது.

Related posts

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு