முறையாக அனுமதி பெறாமல் வழக்கு அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது சரியானதுதான்: உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வாதம்

சென்னை: முறையான அனுமதியில்லாமல் தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பது நீதிமன்ற நேரத்தையும், பொதுமக்களின் பணத்தையும் வீணடிப்பதாகும் என்பதால் ஊழல் வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது சரிதான் என்று மூத்த வழக்கறிஞர் வாதிட்டார். கடந்த 2008ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக அப்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி மீது 2012ல் அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து, சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023 மார்ச்சில் உத்தரவிட்டது. இதை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று தொடங்கியது. அப்போது, வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய பின்பு விடுவிக்க கோரியது ஏன்? வழக்குப்பதியும் போது குற்றம் சாட்டப்பட்டவர் என்ன பொறுப்பில் இருந்தார்?

என்பன உள்ளிட்ட ஐந்து கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுசம்பந்தமாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தினார். அதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், முதல் தகவல் அறிக்கையில் ஐ.பெரியசாமியின் பெயர் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோதுதான் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநரிடம் ஒப்புதல் பெறாமல் சபாநாயகரிடம் ஒப்புதல் பெறப்பட்டது சட்டப்படி தவறு என்பதால்தான் சாட்சி விசாரணை தொடங்கிய பின்னர் விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

முறையான அனுமதியில்லாமல் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது. அப்படி விசாரிப்பது நீதிமன்ற நேரத்தையும், பொதுமக்களின் பணத்தையும் வீணடிப்பதாகும். சபாநாயகரின் ஒப்புதல் சட்டப்படி செல்லாது என்பதால் சிறப்பு நீதிமன்றம் மனதைச் செலுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. அது சரியானது என்று வாதிட்டார். அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பு வாதம் முடிந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு வாதங்களுக்காக விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இன்றைக்கு தள்ளிவைத்தார்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!