எம்எல்ஏக்களின் மாண்புக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்

*சபாநாயகர் எச்சரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியில் எம்எல்ஏக்களின் மாண்புகள் மற்றும் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வண்ணம் நடந்து கொள்ளும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கையும், உரிமை மீறல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான சட்டமன்ற தொகுதிகளில் எம்எல்ஏக்களை அழைக்காமல் அமைச்சர் தன்னிச்சையாக நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் சில தினங்களுக்கு முன்பு சபாநாயகர் செல்வத்திடம் புகார் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே புதுச்சேரியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்கள், தலைமை செயலர், அரசு செயலர்கள் ஆகியோருக்கு சபாநாயகர் செல்வம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சட்டசபை உறுப்பினர்கள் மக்களின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகளாக இருப்பதால் நம்முடைய ஜனநாயக கூட்டமைப்பில் முக்கிய இடம்வகிக்கிறார்கள். எனவே அரசு விழாக்கள் மற்றும் அரசு சார்ந்த முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இது அரசின் பல வழிகாட்டுதல்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் எவ்வித வழிகாட்டுதலும் இல்லாத பட்சத்திலும்கூட எம்எல்ஏக்களுக்கு உரிய மரியாதை மரபு வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் எம்எல்ஏ தொகுதியில் நடைபெறும் அரசு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பூமிபூஜை ஆகியவற்றில் பங்கேற்க சில எம்எல்ஏக்களுக்கு அழைப்பு மற்றும் உரிய தகவல் இல்லாதது குறித்து என் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிகழ்ச்சிகளில் தொகுதி எம்எல்ஏ அழைக்கப்பட வேண்டும். விழா மேடையில் உரிய இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.

அழைப்பிதழ்களில் அரசின் நெறிமுறைக்கு ஏற்ப பெயர்கள் அச்சிடப்பட வேண்டும். நிகழ்ச்சிகள் குறித்த தகவல் முன்கூட்டியே எம்எல்ஏக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டுமென்ற அறிவுறுத்தல்கள் அரசால் பலமுறை வழங்கப்பட்டுள்ளது. சட்டசபை மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் மாண்புகள் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் இவ்வாறான அரசின் அறிவுறுத்தல்களை உண்மையான உணர்வுடன் கடைபிடிக்க வேண்டியது அரசு அலுவலர்களின் கடமையாகும்.

கடமை தவறும் அரசு அலுவலர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு ஊழியர் நடத்தை விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டசபை மற்றும் உறுப்பினர்களின் மாண்புகள் மற்றும் உரிமைகளுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது உரிய உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கவும், புதுவை சட்டசபை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய கருத்துக்களின் அடிப்படையில் இனி வரும் காலங்களில் சட்டசபை மற்றும் எம்எல்ஏக்களின் மாண்புகள் மற்றும் உரிமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் வண்ணம் நடந்து கொள்ளும் அரசு ஊழியர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுவதுடன் உரிமை மீறல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே அனைத்து அரசுத்துறை செயலர்களும், மேற்கூறிய அறிவுறுத்தல்களை தங்கள் துறை அலுவலர்கள் கடைபிடிப்பது குறித்து உறுதி செய்தல் வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு