தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு பயங்கர இடி, மின்னலுடன் மதுரையை பயமுறுத்திய மழை: பலத்த காற்றுடன் பெய்ததால் மரங்கள் சாய்ந்தன

மதுரை: மதுரையில் நேற்று இரவு பயங்கர இடி, மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. தொடரும் மழை காரணமாக பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். பலத்த காற்றுடன் பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. தமிழ்நாடு முழுவதும் கோடை காலம் துவங்கியதும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினமும் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தப்பித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. மதுரையில் கோரிப்பாளையம், சிம்மக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை நேற்று பெய்தது. பலத்த மழைக்கு நடுவே வேகமாக காற்று வீசியதால் பல இடங்களில் மரம், மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன.

அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தி சரி செய்தனர். பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ரோடுகள் சேதமடைந்தன. அவற்றை மழை காலம் முடிந்ததும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் இந்திராணிபொன்வசந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் 5 தினங்களுக்கு மழை பெய்வது நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் வடகிழக்கு பகுதியில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் காரணமாகவும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீட்பு பணிகளை செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பேரிடர் மீட்பு பணிக்குழுவினர் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.

* மரம் விழுந்து 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் சாவு

அலங்காநல்லூர், பாலமேடு சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலை, தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுழன்று அடித்த சூறாவளிக்கு பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் மின்வயர்கள் மீது சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்தடை ஏற்பட்டது. அலங்காநல்லூர் அருகே செல்லகவுண்டம்பட்டி பகுதியில் வெடிகோனார் தோப்பு என்ற இடத்தில் மரங்கள் முறிந்து கோழிப்பண்ணை மீது விழுந்தன. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் நசுங்கி உயிரிழந்தன. சேத மதிப்பு ரூ.3 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. சாலையில் விழுந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வெங்கடேஷ் பாபு, சாலை ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

Related posts

நாகை அருகே 200 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

திருச்சூரில் அடர்வனத்தைவிட்டு வெளிவந்த காட்டு யானை: மக்கள் குடியிருப்புகளில் புகுந்ததால் பரபரப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்