தமிழ்நாடு பேரிடரில் இருந்து மீள ஒன்றிய அரசு உடனடியாக ரூ.5060 கோடி வழங்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

டெல்லி: தமிழ்நாடு பேரிடரில் இருந்து மீள ஒன்றிய அரசு உடனடியாக ரூ.5060 கோடி வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை குறிப்பாக சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நான்கு மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் கார்கள், பைக்குகள் வெள்ள நீரில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில், சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. இந்த நிலையில், புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க இடைக்கால நிவாரணமாக உடனடியாக ரூ.5,060 கோடி வழங்கிட கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதனடிப்படையில் ஒன்றிய அரசு மாநில பேரிடர் மீட்பு பணிகளுக்கான SDRF நிதியின் கீழ் தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணத்திற்கு ரூ.450 கோடியும், சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்கும் ரூ.561 கோடியும் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் பேரிடரில் இருந்து மீள ஒன்றிய அரசு உடனடியாக நிவாரணத்தை வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத அளவு பெரும் மழை வெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த பேரிடரிலிருந்து மீள ஒன்றிய அரசு ரூ.5060 கோடி உடனடியாக வழங்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு சிறப்பு நிதியிலிருந்து உதவி வழங்க வேண்டும். யூஜிசி – நெட் தேர்வுகளை நாண்கு மாவட்டங்களில் மீண்டும் நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்