பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் எச்சரிக்கை 3,500 பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை

*27 மீனவ கிராம மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

நாகப்பட்டினம் : கனமழை எதிரொலியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராம மீனவர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்புகள் செல்போன் வழியாக அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் 3,500 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லவில்லை.தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) துவங்கியது. அதற்கு முன்னதாகவே வெயில் தாக்கம் இருந்து வந்த நிலையில் கத்திரி வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது.

காலை 7 மணிக்கே வெயிலின் உக்கிரம் ஆரம்பமாகி நேரம் செல்லச்செல்ல வெப்பம் அதிகரிக்கத்தது. மாவட்ட நிர்வாகமும் மதியம் 12 மணி முதல் 3 மணிவரை பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தது. இந்நிலையில் பத்து நாட்களாக வெயில் கொடுமையை மக்கள் அனுபவித்து வந்தனர். அதன்பிறகு சில இடங்களில் லேசாக கோடை மழை பெய்தது. தொடர்ந்து பரவலாக பெய்து வரும் கோடைமழையால் வெப்பம் தணிந்து குளிச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மக்களும் நிம்மதியடைந்தனர்.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வரும் 21ம் தேதி வரை கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடந்த 18ம் தேதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பட்டினச்சேரி,நம்பியார் நகர், செருதூர்,காமேஸ்வரம்,விழுந்தமாவடி வெள்ளபள்ளம் உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் உள்ள 3 ஆயிரத்து 500 பைபர் படகுகள் கடந்த 3 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் தணிந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழையின் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அவ்வப்பொழுது கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதை மீனவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மீனவர்களின் செல்போன் எண்களுக்கு கடல் சீற்றம் குறித்த தகவல்களை எஸ்எம்எஸ் வாயிலாக குறுச்செய்திகள் அனுப்பப்படுகிறது. மேலும் ஒரு பெண் வானிலை நிலவரத்தை பேசுவது போல் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அனுப்புகின்றனர். இதில் கடல்அலைகள் ஒன்றரை மீட்டர் உயரம் வரை எழக்கூடும். கடல் நீரோட்டம் அதிக வேகத்தில் இருக்கும். எனவே மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும் என அந்த ஆடியோ மூலம் தெளிவுப்படுத்துகின்றனர். இவ்வாறு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் செல்போன் எண்ணிற்கு தகவல் நேற்று(19ம் தேதி) முதல் வருகிறது. இவ்வாறு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அனுப்பிய எச்சரிக்கையை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம்,நாகூர், செருதூர், காமேஸ்வரம்,வெள்ள பள்ளம்,சாமந்தான்பேட்டை,நம்பியார் நகர், கல்லார் உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் உள்ள 3 ஆயிரத்து 500 பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீன்பிடி துறைமுகங்களில் இதனால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களுக்கு வேலை இழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 750 விசைப்படகுகள் ஆழ்கடல் செல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது