மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் பெற்றோருக்கு உதவாத மகன்கள் நேரில் ஆஜராக நோட்டீஸ்: கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு

ஆலந்தூர்: கிண்டியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்டு சிறப்பு முகாமில், தங்களது மகன்கள் உதவி செய்யாததால் மிகவும் கஷ்டப்படுவதாக பெற்றோர்கள் கொடுத்த மனுக்களை தொடர்ந்து, மகன்கள் நேரில் ஆஜராக கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். சென்னை கிண்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. கோட்டாட்சியர் அருளானந்தம் தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் கிண்டி ராமன், ஆலந்தூர் புவனேஸ்வரி, மயிலாப்பூர் வித்யா முன்னிலை வகித்தனர். முகாமில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கேட்டு மனுக்களை கொடுத்தனர். இதில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகளை உடனடியாக கோட்டாட்சியர் வழங்கினார்.

வேளச்சேரியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (75) என்பவர் தனது மனைவியுடன் வந்து கொடுத்த மனுவில், தங்களுக்கு 3 மகன்கள் இருந்தும் உதவி செய்யவில்லை. சாப்பாட்டிற்கே கஷ்டப்படுகிறோம் என்று கூறியிருந்தார். இதேபோல் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (70) என்பவர், முதியோர் இல்லத்தில் சேர்த்த மகன் மாதந்தோறும் முதியோர் இல்லத்திற்கு பணம் கொடுக்காததால் கஷ்டப்படுவதாகவும், மகனிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த 2 மனுக்களையும் பெற்ற கோட்டாட்சியர் அருளானந்தம் சம்பந்தப்பட்ட மகன்களுக்கு நோட்டீஸ் வழங்கி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி