மாற்றுத்திறனாளி தம்பதியிடம் அநாகரீகம் அரசு பஸ் டிரைவர் கண்டக்டர் சஸ்பெண்ட்

வேலூர்: சென்னையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் அரசு பஸ் நேற்று முன்தினம் மாலை வேலூர் புதிய பஸ் நிலையம் வந்தது. இந்த பஸ்சில் பள்ளிகொண்டாவை சேர்ந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ராமதாஸ், தனது பார்வையற்ற மாற்றுத்திறனாளி மனைவியுடன் ஊருக்கு திரும்புவதற்காக ஏறினார். இதனை கண்ட கண்டக்டர் பிரபு, மாற்றுதிறனாளி தம்பதியை தரக்குறைவாக பேசினாராம். மேலும், தம்பதிக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை ஒதுக்கி தராமல் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.

இதனால் அவர்கள் பொய்கை பஸ் நிறுத்தம் வரை நின்றபடியே பயணம் செய்துள்ளனர். அங்கு ஒரு பயணி எழுந்து கொண்டு தனது இருக்கையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியை அமர வைத்துள்ளார். பின்னர் பள்ளிகொண்டாவில் மாலை 4.20 மணியளவில் பஸ் நின்றதும் மாற்றுத்திறனாளி தம்பதியினர் கீழே இறங்கினர். அப்போது, டிரைவர் செந்தில் ‘எவ்வளவு நேரம் இறங்குவதற்கு’ எனக்கூறியபடியே அவர்கள் இறங்கும் முன்பே பஸ்சை இயக்கியுள்ளார். இதனால் ராமதாசும் அவரது மனைவியும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதனை யாரோ ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி அரசு போக்குவரத்துக்கழக டிரைவர், கண்டக்டருக்கு கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து, வேலூர் போக்குவரத்து மண்டல பொது மேலாளர் கணபதி விசாரணை நடத்தினார். அதில் டிரைவரும், கண்டக்டரும் மாற்றுத்திறனாளி தம்பதியிடம் அநாகரீகமாக நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் செந்தில், கண்டக்டர் பிரபு ஆகியோரை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு