மெட்ரோ ரயிலில் அழுக்கு உடை விவசாயியை தடுத்த செக்யூரிட்டிகள்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்

பெங்களூரு: அழுக்கு ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் ஏற முயன்ற வடமாநில விவசாயியை அனுமதிக்க முடியாது என்று செக்யூரிட்டிகள் தெரிவித்த நிலையில் விவசாயிக்கு ஆதரவாக போராடி பயணிகள் அனுமதி பெற்று தந்தனர். பெங்களூரு மாநகரில் உள்ள ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று வடமாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் டிக்கெட் பெற்ற பிறகு ரயிலில் ஏற முயன்ற போது அவரை மெட்ரோ பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர் தடுத்து நிறுத்தி ரயிலில் ஏற அனுமதிக்க மறுத்தனர். அழுக்கு உடைகளுடன் தலையில் மூட்டையில் சில பொருட்களுடன் அவர் வந்ததை பார்த்து அவரை உள்ளே விடமுடியாது என்று பாதுகாப்பு ஊழியர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அப்போது அங்கிருந்த கார்த்திக் என்ற பயணி, குறுக்கிட்டு மெட்ரோ அதிகாரிகளிடம் எதற்காக ரயிலில் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்ற காரணத்தை கேட்டார். அவர் அழுக்கு உடையுடன் இருப்பதால் அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்பு ஊழியர்கள் கூறிய நிலையில் இது அரசாங்கத்தின் பொது போக்குவரத்து சொத்து இதில் இந்த காரணத்திற்காக அவரை அனுமதிக்க முடியாது என கூறுவதை ஏற்க முடியாது. அவரை அனுமதித்தே தீர வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார். அவருக்கு ஆதரவாக பிற பயணிகளும் குரல் கொடுத்த நிலையில் மெட்ரோ பாதுகாப்பு ஊழியர்கள் விவசாயியை ரயிலில் பயணம் செய்ய அனுமதித்துள்ளனர். வடமாநிலத்தில் இருந்து மொழி பேச முடியாத நிலையில் மெட்ரோ ரயிலில் ஏற முடியாமல் சிக்கித் தவித்த விவசாயிக்கு திராவிட மக்கள் சமூக நீதியை பெற்றுக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் விவசாயியை தடுத்து நிறுத்திய மெட்ரோ பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ள மெட்ரோ ரயில் நிறுவனம், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது