உதவி வன காப்பாளர் நேரடி நியமனத்திற்கு கல்வி தகுதியில் வனவிலங்கு உயிரியல் முதுநிலை படிப்ைபயும் சேர்க்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்குமார், சாம்சன், தினேஷ், கார்த்திக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2009 டிசம்பரில் 79 வன ரேஞ்சர் பணிக்கான நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் வெளியிட்டது. இந்நிலையில் அந்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டு நவம்பர் 2010ல் தேர்வாணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. தமிழ்நாடு வனத்துறை சார்பு பணிகள் விதிகளில் திருத்தம் செய்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் வன ரேஞ்சர் பணிக்கான கல்வி தகுதியில் வனவியல் படிப்பு மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தது. வனவிலங்கு உயிரியல் படிப்பு சேர்க்கப்படவில்லை.

வன ரேஞ்சர் மற்றும் உதவி வன காப்பாளர் பணிக்கான அனைத்து தகுதிகளும் உள்ள நிலையில் எம்.எஸ்சி வன விலங்கு உயிரியல் தகுதியை மட்டும் சேர்க்காமல் விட்டது விதிகளுக்கு முரணானது. எனவே, வனவிலங்கு உயிரியல் படிப்பை சேர்க்காமல் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு வனத்துறை சார்பு பணிகள் விதியை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். வனவிலங்கு உயிரியலில் முதுநிலை படிப்பையும் உதவி வன காப்பாளர் பணி நியமனத்திற்கான கல்வி தகுதியில் சேர்க்குமாறு உத்தரவிட வேண்டும்” என்று கோரி இருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன் ஆஜராகி, வனத்துறை பணிக்கு கடந்த 1992 விதிகளின்படி மனுதாரர்கள் படித்த எம்.எஸ்சி வனவிலங்கு உயிரியல் படிப்பு சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சிறப்பு படிப்பான இந்த கல்வி தகுதியை நீக்கம் செய்து தமிழ்நாடு வனத்துறை சார்பு பணிகள் விதிகளில் திருத்தம் செய்தது சட்ட விரோதமாகும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களின் கல்வி தகுதி ஏற்கனவே உள்ள விதிகளின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பாரபட்சம் காட்டும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது சட்டவிரோதமாகும். எனவே, ஏற்கனவே இருந்த விதியின்படி வனத்துறை பணிகளுக்கான தகுதியில் எம்.எஸ்சி வனவிலங்கு உயிரியல் படிப்பையும் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

Related posts

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருச்சியில் மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு