நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் இளம் வாக்காளர்களை சேர்க்க நேரடி கள ஆய்வு

*தேர்தல் பிரிவு அலுவலர்கள் தகவல்

பொள்ளாச்சி : நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் இளம் வாக்காளர்களை சேர்க்க வீடுகள்தோறும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் நேரடி களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியிடுவதற்காக பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறும் பணி டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெற்றது.

மேலும், வாக்குச்சாவடிகளில் குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு விண்ணப்பப்படிவம் பெறப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களில் பெறப்பெற்ற விண்ணப்பங்கள், வாக்குசாவடி நிலைய அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை தவிர மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் தகுதியானவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டது.

இதைதொடர்ந்து சுருக்கமுறை செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல், கடந்த மாதம் வெளியிடப்பட்டது. பொள்ளாச்சி மற்றும் வால்பாறை என இரு சட்டமன்ற தொகுதியையும் சேர்த்து மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 449 வாக்காளர்கள் அடங்குவர். கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்களைவிட கூடுதலாக 2,687 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர்களாக மாறுவதற்கான நடவடிக்கையில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, இளம் வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அந்தந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் முன்னிலையில், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று, புதிய வாக்காளர்கள் குறித்து கேட்டறிந்து, விடுபட்டால் அவர்களின் பெயர்களை சேர்பது மட்டுமின்றி, திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இப்பணி வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், ‘‘18 வயது பூர்த்தியானவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தகுதியுடையவர்களாக உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டாலும், விடுபட்டவர்களின் பெயர்களை சேர்க்கவும், திருத்தம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர்களாக மாறுவதற்காக, இளம் வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது. அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் முன்னிலையில் குழுவாக வீடு வீடாக சென்று அப்பணி நடக்கிறது. பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் ஆன்லைனின் பதிவு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றனர்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு