குறைந்த விலையில் கட்டுமான பொருட்கள்!: திண்டுக்கல்லில் கட்டட பொறியாளர்களை குறிவைத்து ரூ.4 கோடி மோசடி.. எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கட்டுமான பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி 10க்கும் மேற்பட்டோரிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். திண்டுக்கல்லில் குறைந்த விலையில் கட்டுமான பொருட்கள் தருவதாக கட்டட பொறியாளர்களிடம் 4 கோடி ரூபாய் ஏமாற்றியதாக பகீர் புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் வாழகாய்பட்டி பிரிவு முத்தமிழ் நகர் பகுதியில் கட்டுமான பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருபவர் லூயிஸ்.

இந்த நிறுவனத்தில் பங்கு தாரராக இவரது மனைவி கரோலின் ரீட்டா மற்றும் நண்பர் உத்திராஜ் ஆகியோர் உள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து கட்டுமான பொருட்களை மொத்தமாக விலைக்கு வாங்கி மார்க்கெட் விலையை விட சிமெண்ட், இரும்பு, கம்பி போன்ற கட்டிடத்திற்கு தேவையான கட்டுமான பொருட்களை குறைந்த விலையில் தருவதாக தனியார் கட்டிட பொறியாளர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோபால்பட்டி, சாணார்பட்டி மற்றும் வேடப்பட்டி பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கட்டட பொறியாளர்கள், லூயிஸிடம் கடந்த 2 வருடங்களாக கட்டுமான பொருட்களை வாங்கியுள்ளனர்.

இதனிடையே லூயிஸ், கட்டுமான பொருட்களுக்கு மொத்தமாக பணம் செலுத்தினால் தான் குறைந்த விலையில் பொருட்கள் தர முடியும் என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து கட்டிட பொறியாளர்கள் பலரும் வங்கி காசோலையாகவும், ரொக்கமாகவும் 4 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கட்டுமான பொருட்களை உரிய நேரத்தில் தராமல் லூயிஸ் காலதாமதம் செய்து வந்ததாகவும், இதுகுறித்து கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாழக்காபட்டி பிரிவில் இருந்த லூயிஸ் நிறுவனம் மூடப்பட்டதுடன், லூயிசின் செல்போனும் சுவிச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது. மேலும் கரோலின் ரீட்டா மற்றும் உத்திராஜ் ஆகியோரின் செல்போனும் சுவிச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீடும் பூட்டப்பட்டு இருந்ததால் பாதிக்கப்பட்ட பொறியாளர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரிடம் புகார் அளித்தனர். 4 கோடி வரை மோசடி செய்து தலைமறைவான லூயிஸ் மற்றும் பங்குதாரர்களை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது