திற்பரப்பில் குளு குளு சீசன்

*சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குலசேகரம் : குமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான இயற்கை சுற்றுலாதலம் திற்பரப்பு அருவி. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு இங்கு அருவியாக விழுவதால் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது. இதற்கிடையே சில மாதங்களாக சுட்டெரிக்கும் கடும் வெயில் அடித்து வந்ததால் நீர் நிலைகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து வந்தது.

திற்பரப்பு அருவியிலும் மிதமான அளவு தண்ணீர் கொட்டியது. கடந்த 2 மாதங்களாக கோடை விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டம் தினமும் அதிக அளவு இருந்தது. இதனால் திற்பரப்பில் கோடை சீசன் களை கட்டியிருந்தது. இந்த நிலையில் பருவ மழை காலம் என்பதால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயில் மங்கி காணப்பட்டது.

சில நாட்களாக அவ்வப்போது சாரல் பெய்து வருகிறது. இங்கு குற்றால சீசனை நினைவு படுத்தும் வண்ணம் அவ்வப்போது வெயில் அடிப்பதுடன் லேசான சாரல் மழையும் பெய்தது. வானம் எப்போதும் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் அருவியில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

வெயில் இல்லாமல் இதமான காற்றும் வீசுவதால் திற்பரப்பு அருவி பகுதியில் குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இந்த இதமான சூழல் பயணிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் உள்ள திற்பரப்பு தடுப்பு அணையில் நடைபெறும் உல்லாச படகு சவாரிக்காக படகு துறையில் கூட்டம் அலைமோதியது. பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகுகளில் சவாரி செய்து கோதையாற்றின் 2 பக்கங்களிலும் உள்ள மரங்கள் அடர்ந்த வனப்பு மிகுந்த பகுதிகளை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

Related posts

பிஸ்கட் சீக்ரெட்…

சென்னையில் மணக்கும் மதுரை!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: வெளி மாநிலத்தில் இருந்து மெத்தனால் வாங்கி விற்பனை