பனையஞ்சேரி கிராமத்தில் பழுதடைந்து மூடியே கிடக்கும் விஏஓ அலுவலகம்: புதிதாக கட்ட கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே பனையஞ்சேரி கிராமத்தில் பழுதடைந்து மூடியே கிடக்கும் விஏஓ அலுவலகத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே பனையஞ்சேரி ஊராட்சியில், பனையஞ்சேரி, சீயஞ்சேரி ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது.

இந்த, அலுவலகத்திற்கு மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஜாதி, வருமானம், இருப்பிடம், பிறப்பு, இறப்பு உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பெற தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், 30 ஆண்டுகளாக உள்ள இந்த கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்தும், விரிசல் ஏற்பட்டும் காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் தண்ணீர் ஒழுகி அலுவலகத்தில் உள்ள கோப்புகள் நனைந்து நாசமாகின்றன. மேலும், மழை காலங்களில் மழை பெய்து அலுவலகங்களில் தண்ணீர் புகுந்து சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.

தற்போது, இந்த விஏஒ அலுவலகம் பாழடைந்து காணப்படுவதால் இங்கு பணியாற்றும் விஏஓ, பெரியபாளையம் விஏஒ அலுவலகத்திற்குச் சென்று விடுகிறார். இதனால், பனையஞ்சேரி அலுவலகம் பூட்டியே கிடப்பதால், இப்பகுதி மக்கள் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியபாளையம் அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள பனையஞ்சேரி விஏஓவிடம் மனுக்கள் கொடுக்கின்றனர். மேலும், பயன்பாடில்லாத விஏஓ அலுவலகத்தில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மாடுகளை கட்டிப்போடுவதால், அது மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது.

எனவே, பழுதடைந்து பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பனையஞ்சேரி கிராமத்தில் உள்ள விஏஓ அலுவலகம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், பனையஞ்சேரி விஏஓ, பெரியபாளையத்தில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று விடுகிறார். நாங்கள் அவரிடம் சான்றிதழ்களில் கையொப்பம் பெற 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. விஏஓ அலுவலகம் முன்பு தற்போது மாடுகள் கட்டி போடப்பட்டுள்ளன. எனவே, பழுதடைந்த அலுவலகத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றனர்.

Related posts

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது