சங்க காலத் தமிழர்களின் உணவுமுறைகள்!

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒரு உணவுக்கலாச்சாரம் இருக்கிறது. அதுபோல் தமிழர்களுக்கும் ஒரு நீண்ட நெடிய உணவுப்பாரம்பரியம் இருக்கிறது. இதில் சங்க காலத்தில் நடைமுறையில் இருந்த உணவுமுறைகள் குறித்து இலக்கியங்களில் பொக்கிஷமாக பொதிந்து வைக்கப்பட்டு இருக்கிறது. சங்க கால மக்களின் உணவுமுறை மற்றும் சமையல் முறைகள் குறித்து நற்றிணையில் தெளிவாக விளக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்களின் உணவு வகைகள் பெரும்பாலும் பருவச் சூழ்நிலை, வாழும் நிலத்தின் தன்மை, விளையும் பொருட்கள், பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. சங்க கால மக்களின் உணவு வகைகள் உடல் நலத்திற்கு ஏற்றவையாக இருந்தன. மேலும் உணவைச் சுவையாகச் சமைப் பதிலும், உண்பதிலும் அந்தக்கால மக்கள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். உணவினை நீரிட்டு அவித்தல், வறுத்தல்,
சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயில் இட்டுப் பொரித்தல், ஊறவைத்தல் போன்ற முறைகளைப் பின்பற்றிஇருக்கிறார்கள்.

உப்புப் பண்டம்

நாற்றம் கொண்ட மீனை உப்பிட்டுக் காய வைத்து, அவற்றைப் பறவை இனங்கள் கவர்ந்து செல்லாமல் இருக்க காவல் காத்து நிற்பவர்கள்தான் பரதவ குலத்துப் பெண்கள் எனவும் ஒரு பாடல் குறிப்பிடுகிறது. மேலும் நற்றிணையில் அத்திப்பழம், இலுப்பைப் பழம், குமிழம் பழம், கொன்றைப் பழம், நாவற்பழம் போன்றவையும் பல பாடல்களில் இடம்பெற்றுள்ளன.

குறுந்தொகையில் உணவு முறை

சங்க கால மக்கள் அசைவ உணவையே பெரிதும் விரும்பி உண்டிருக்கிறார்கள். பண்டைத் தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக பிரிக்கப்பட்டு இருந்தன. இதில் குறிஞ்சி நில மக்கள் மலையில் விளைந்த தினையைச் சோறாக்கியும், நெய்யில் பொரிக்கப்பட்ட இறைச்சியையும் உண்டனர். மருத மக்கள் வெண்சோற்றையும், நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கூட்டையும், பழைய சோற்றையும் உண்டனர். இவர்கள் அவலைக் கூட உண்டனர்.கடல் பகுதியான நெய்தல் நில மக்கள் இறால்மீன், வயல் ஆமை ஆகியவற்றைப் பக்குவம் செய்து உண்டனர். பாலைநில மக்கள் இனிய புளிக்கறி இடப்பட்ட சோற்றையும், கறியையும், இறைச்சியையும் உண்டனர். அரசன், புலவர், மக்கள் ஆகிய அனைவருமே தேறல் உண்ணும் வழக்கம் உடையவர்களாக இருந்துள்ளனர். வேதியர்களின் வீட்டில் புலால் இல்லாத மரக்கறி உணவை உண்டதாகக் குறிப்பு இருக்கிறது. இராசன்னம் என்ற ஒருவகை நெல்லில் செய்த சோற்றுடன் மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையும் கலந்து, பசு வெண்ணெயில் வேக வைத்து பொறியலோடு உண்ட செய்தி பெரும்பாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுஇருக்கிறது.

பதிற்றுப்பத்தில்

உணவு வகை:

சங்க காலத் தமிழர்களுடைய வாழ்க்கை இயற்கையோடு இயைந்ததாய் இருந்தது. அவர்கள் வாழும்சுற்றுச்சூழலுக்கேற்ப அமைந்திருந்தது. ஐந்து நிலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலை பல்வகை வேறுபாடுகளுடன் இருந்ததைச் சங்ககாலப் பாடல்கள் காட்டுகின்றன. பதிற்றுப்பத்தில் காணப் படும் பாடலொன்று, கள்ளை உண்பீராக, சோற்றைச் சமைப்பீராக, தின்னப்படும் ஊன் கறியை அறுப்பீராக, கறி வகைகளை உலையில் ஏற்றுவீராக என குறிப்பிடுகிறது.

தினை வகை

சேரநாட்டு மக்களின் முக்கிய உணவாக சோறு இருந்ததை “அடுமின் சோறெ” என்ற அடி உணர்த்துகிறது. நெல்லின் வகை நிலத்துக்கு நிலம் மாறுபடும். மருதநில மக்கள் செந்நெல் சோறும் மலை நில மக்கள் வெண்ணெல் சோறும் சாப்பிட்டு இருக்கிறார்கள். செந்நெல் சிறிய மஞ்சள் நிறமுடைய தானியம் என்றும், வெண்ணெல் ஒரு வகையான காட்டரிசி என்றும் கூறுவர். சோற்றைப் பல வகையில் பக்குவப்படுத்திச் சேரர்கள் உண்டதைப் பதிற்றுப்பத்து விளக்குகிறது.

தினை மா

தினைமா பண்டைத் தமிழர் விரும்பி உண்ட ஒரு உணவுப் பொருளாகும். இன்று நாம் வீடு தேடி வரும் விருந்தினர்களுக்கு இனிப்புப் பண்டங்களை வழங்குவது போல் அன்று தினை மாவைக் கொடுத்திருக்கிறார்கள். தினை மா ‘நுவணை’ என அழைக்கப்பட்டு இருக்கிறது. இடித்து நுண்ணிதாகப்பட்ட மாப்பொருள் என்பதனால் இது ‘மென்றினைநுவணை’ எனப்பட்டது.

பழங்கள், கிழங்குகள்

சேரநாட்டுத் தமிழர்கள் பழவகை களையும், கிழங்கு வகைகளையும்உணவுப் பொருளாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். முழவு போன்றமைந்த பெரிய பலாப்பழத்தை அவர்கள் உண்டனர். வழிச் செல்வோருக்கு, அவர்களுடைய களைப்பைப் போக்க தேன் நிறைந்த முட்டை போன்ற வடிவத்தையுடைய முதிர்ந்த பழங்கள் உணவாகி உள்ளன. பழங்களோடு கிழங்கு வகைகளும் சேர நாட்டுத் தமிழர்களின் உணவாக அமைந்துள்ளது என்று பதிற்றுப்பத்து கூறுகிறது.

கருப்பஞ்சாறு

கரும்புச்சாறை சங்க கால மக்கள் விரும்பி அருந்தினர். மருத நிலத்தில் வாழும் மக்கள் நெல்லுக்கு வேலியாகக் கரும்பை நடுவர். அது வளர்ந்து
நெல்லின் வளர்ச்சியைக் கெடுத்தலால் அரிந்து பிழிந்து சாறு பெறுவர். அதை வரும் விருந்தினருக்கு வழங்கி இருக்கிறார்கள். இதை பெரும்பாணாற்றுப்படை விளக்குகிறது.

சங்க கால தமிழர்கள் சைவம்,

அசைவம் இரண்டு உணவுகளையும் வகை வகையாக சமைத்து உண்டனர் என்பதற்கு சான்றாக சங்க பாடல்கள் நமக்கு தெளிவுப்படுத்துகிறது. தனியாக உண்ணும் பழக்கம் தமிழர்களுக்கு என்றுமே கிடையாது என்பதற்கு சான்றாகவும் திணைப்பாடல்கள் கூறுகின்றன. மன்னர்கள் அரண்மணையில் வரும் மக்களுக்கு உணவு அளித்து மகிழ்ந்தனர். சங்க கால மக்கள் அசைவ உணவு மிகுதியாக உண்டனர். பிறகு நீதி இலக்கியங்கள் புலால் உண்ணுதல் மிகவும் பாவச்செயல், சைவ உணவுதான் சிறந்தது என்று கூறுகிறது. இக்கருத்துகள் திருக்குறள், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஒளவையார் பாடல் போன்றவற்றில் விரவிக்கிடக்கின்றன.

Related posts

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

கட்டிடத்துக்கு அனுமதி வழங்காததால் பழங்குடியின மாணவர்களுக்கு கன்டெய்னரில் பள்ளி: தெலங்கானாவில் புதுமை