உணவுப்பழக்கமும்… சில நம்பிக்கைகளும்!

மனிதர்களிடையே பல்வேறு விதமான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. அவை காலம் காலமாகத் தொடர்ந்து வருகின்றன. இவ்வாறு தொடர்ந்து வரும் நம்பிக்கைகளில் இருந்து மக்களின் பண்பாடுகள் வெளிப்படுகின்றன. இந்த வகையில் உணவுப்பழக்கம் தொடர்பான சில நம்பிக்கைகளும் மக்களிடம் நிலவிவருகின்றன. இந்த நம்பிக்கைகள் குறித்து இங்கு காண்போம். அருகாலில் அமர்ந்து உணவு உண்ணக்கூடாது என்றொரு நம்பிக்கை மக்களிடம் உண்டு. அருகாலில் அமரக்கூடாது என்பதும் நம்பிக்கையே. அருகால் என்பது வீட்டின் முக்கியமான ஒரு உறுப்பு. வீட்டிற்கும், வீட்டுக்கு வெளியில் உள்ள இடத்திற்கும் எல்லையாக அமைவது அருகால். எல்லைகள் குறித்த பயம் மக்களிடம் மட்டுமல்ல நாடுகளிடையேயும் நிலவி வருகின்றன. அருகாலை எல்லையாகக் கருதுவதனால்தான் வீட்டுக்கு அருகால் வைக்கும்போது தீய ஆவிகள் அருகாலைத் தாண்டி வீட்டினுள் வராமல் இருப்பதற்காகப் பல்வேறு சடங்குகளைச் செய்கின்றனர். வீட்டினுள் குடி வருவதற்கு முன்பு அருகாலில் தெய்வ உருவங்களைச் செதுக்கி எல்லை தெய்வமாக வழிபட்டு பூசணிக்காயைப் பலிகொடுத்த பின்பே வீட்டினுள் நுழைவர். (ஊர்களின் எல்லைகளிலும் எல்லைத் தெய்வங்கள் உண்டு என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது) அருகால் எல்லையாகக் கருதப்படுவதாலும், தெய்வமாகக் கருதப்படுவதாலும் அருகால் மீது தலைவைத்துப் படுக்கக்கூடாது, அருகாலில் அமரக்கூடாது என்ற நம்பிக்கைகளும் நிலவுகின்றன.

இரணிய வேளையில் (சூரியன் மறையும்போது) உண்ணக் கூடாது என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. இரணிய வேளை என்று குறிப்பிடப்படும் சூரியன் மறையும் நேரம் என்பது பகல் முடிந்து இரவு தொடங்குவதற்கான வேளை. இதனையும் எல்லையாகவே நாம் கருத வேண்டியுள்ளது. பொழுதுகளில் நண்பகல், நள்ளிரவு, அதிகாலை, மாலை போன்ற நேரங்கள் ஒரு பொழுதுக்கும் இன்னொரு பொழுதுக்கும் எல்லையாகக் கருதப்படுகின்றன. இதுபோன்ற நேரங்களில் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும் மனிதர்கள் (பூப்பெய்திய பெண்கள், கர்ப்பிணிகள், மாதவிலக்கானவர்கள்) வெளியில் உலாவக்கூடாது என்ற நம்பிக்கை உண்டு. ஒரு பெண் பூப்பெய்தும்போது சிறுமி என்ற பருவ நிலையில் இருந்து குமரி என்ற பருவநிலைக்கு மாறுகிறாள். இந்த இரு பருவங்களுக்கும் பூப்பெய்துதல் என்ற நிகழ்வே எல்லையாக அமைகிறது. இதுபோலவே உணவு உண்ணுதல் என்ற நிகழ்வு ஒரு மனிதனின் இரு நிலைகளுக்கு எல்லையாக அமைகிறது. பசியோடு இருக்கும் மனிதன் உணவு உண்டபின் பசியாறி புத்துணர்ச்சி பெறுகிறான். பசி என்பது கொடுமையானது. பசி வந்திடப் பத்தும் பறக்கும் என்பது பழமொழி. ஏழை மக்கள் விடும் ஏப்பம் பசி ஏப்பம் என்றும், பணக்காரர்கள் விடும் ஏப்பம் புளியேப்பம் என்றும் குறிப்பிடுவர். எனவே உணவு உண்பது என்ற செயல் பசியோடு களைத்திருத்தல், பசியாறி புத்துணர்வு பெறுதல் என்ற இருநிலைகளுக்கு எல்லையாக அமைகிறது.

அதனால் பூப்பெய்திய (அ) கர்ப்பிணிப் பெண்கள் மாலை வேளையில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையோடு தொடர்புடையதாகவே மாலை வேளையில் உண்ணக்கூடாது என்ற நம்பிக்கையையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.உண்ட உடன் குளிக்கக்கூடாது என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. உண்டவுடன் குளித்தால் எளிதில் சீரணமாகாது என்பதனால் இவ்வாறு கூறப்படுகிறது. உண்டபின் இலையைத் தன்னை நோக்கி மடிக்கவேண்டும். அவ்வாறு மடித்தால் உண்பவருக்கும், உணவு அளிப்பவருக்கும் இடையிலான உறவு வேண்டும் என்று பொருள். எதிர்த் திசையில் இலையை மடித்தால் உறவு வேண்டாம் என்று பொருள். எனவே திருமணம் போன்ற நல்ல காரியங்களில் உண்பவர் தன்னை நோக்கி இலையை மடிக்க வேண்டும், கருமாதி விருந்தில் உண்பவர் தனக்கு எதிர்த்திசையை நோக்கி மடிக்க வேண்டும் என்கிற நம்பிக்கையும் காணப்படுகிறது.
உண்டபின் தரையில் கையை ஊன்றி எழுந்திருக்கக்கூடாது என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. அவ்வாறு எழுந்தால் உண்ட உணவு உடலில் ஒட்டாது (சத்து பிடிக்காது) எனக்கூறுவர். கையை ஊன்றி எழுந்திருப்பது முதியவர்களின் இயலாமையைக் குறிக்கும்.

ஒன்றுக்கும் இயலாதவனைக் “கைய ஊனிக் கரணம் போடுறான்” எனக் குறிப்பிடுவர். எனவே கையை ஊன்றி எழுந்திருப்பது இயலாமையின் குறியீடாகக் கருதப்படுவதினால் இந்நம்பிக்கை தோன்றியிருக்கலாம்.உண்ணும்போது பேசக்கூடாது என்ற நம்பிக்கை உண்டு. உண்டு முடித்ததும் கையை உதறக்கூடாது, உண்டு முடித்தபின் ‘ஏவ்…’ என்று நீளமான ஏப்பம் விடக்கூடாது எனக் கருதுவர். உணவில் முடி கிடந்தால் உண்பவருக்கும், உணவளிப்பவருக்கும் இடையிலான உறவு நீடிக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. முடிக்கும் உறவுக்கும் பல்வேறு இடங்களில் நமது பண்பாட்டில் தொடர்பு காணப்படுகிறது. பெற்றோர் இறந்தால் பிள்ளைகள் மொட்டையடிப்பது, மீசையைமழித்துக் கொள்வது பலரிடம் காணப்படும் வழக்கம். கணவன் இறந்தால் மனைவியின் தலைமுடியை மழிப்பது ஒருசில இனத்தரிடம் காணப்படும் வழக்கமாகும். இவ்வாறு முடி என்பது உறவுகளோடு தொடர்புடைய ஒன்றாக விளங்குவதன் அடிப்படையில் இந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம்.உருட்டி உண்டால் குடும்பம் உருண்டுவிடும் என்ற நம்பிக்கையும் காணப்படுகிறது. உருட்டுதல் என்பது தமிழ்ப் பண்பாட்டில் நல்ல செயலாகக் கருதப்படவில்லை. கோபத்துடன் பார்ப்பதை உருட்டிப் பார்த்தல் என்பர். உருட்டுதல் என்றால் அழித்தல், சாகடித்தல் என்று அகராதி பொருள் கூறுகிறது. குறிப்பிட்ட இருவருக்கிடையே சண்டை மூளும்போது “உன்னை உருட்டிடுவன்” என்று கோபத்துடன் கூறுவதையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

உருட்டுதல் என்பது அழிவுக்கான அறிகுறியாக மக்களால் நம்பப்படுவதே காரணமாகும்.உண்ணும்போது உணவை இறைக்கக்கூடாது. அவ்வாறு இறைத்தால் பின்னாளில் உணவுக்குப் பஞ்சம் ஏற்படும். தவறி இறைந்து கிடக்கும் சோற்றுப் பருக்கைகளை விளக்குமாற்றால் கூட்டக்கூடாது என்ற நம்பிக்கை மக்களிடையே உண்டு. உணவுப்பொருளை வீணாக்கக் கூடாது என்ற அடிப்படையில் இறைக்கக் கூடாது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். எந்தப் பொருளையுமே வீணாக்காமல் சிக்கனமாகவும், அளவோடும் பயன்படுத்த வேண்டும் என்னும் கொள்கையின் அடிப்படையிலேயே இந்த நம்பிக்கை காணப்படுகிறது. தண்ணீரை வீணாக்கக் கூடாது, மழைநீரைச் சேமிக்க வேண்டும், மின்சாரத்தை வீணாக்காமல் அளவோடு பயன்படுத்த வேண்டும், எரிபொருள் சிக்கனம் ஆகியவை போன்றே உணவுப் பொருள் பற்றாக்குறையைத் தவிர்க்கும் பொருட்டுக் காணப்படும் நம்பிக்கையாக இது இருக்கிறது. உணவை அன்னம், அன்னலட்சுமி எனக் குறிப்பிடுவர். உணவு கடவுள் நிலையில் வைத்து மதிக்கப்படுகிறது. அதனால்தான் உணவுப் பொருள்களைக் காலால் மிதிக்கக் கூடாது, விளக்குமாற்றால் கூட்டக் கூடாது என்ற நம்பிக்கைகள் நிலவுகின்றன.உப்பை உப்பு என்று கூறாமல் சர்க்கரை என்று குறிப்பிட வேண்டும் என்னும் நம்பிக்கை ஒரு சிலரிடம் காணப்படுகிறது. தாய்மாமன் உண்ணும்போது இலையில் உப்பிட்டால் உறவு முறியும் என்ற நம்பிக்கையும் காணப்படுகிறது. உப்பு, உணவோடு மட்டுமல்ல பண்பாட்டோடும் தொடர்புடைய ஒரு பொருளாக விளங்குகிறது. வயலில் விளைந்து வீட்டிற்கு வரும் முதல்நெல்லைக் கொடுத்து உப்பு வாங்கும் வழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் காணப்படுகிறது. புதுமனைப் புகுவிழாவின் போதும் உப்பு எடுத்துச் செல்லும் வழக்கம் உண்டு. இறப்புச் சடங்கில் எட்டாந்துக்கம் படைக்கும் அன்று உப்பு இடாமல் சமைத்துப் படைக்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. உப்பு என்பது உறவின் தொடர்ச்சியைக் குறிக்கும் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. இதனடிப்படையில் இந்த நம்பிக்கைகள் தோன்றியிருக்கலாம்.

– இரத்தின புகழேந்தி

 

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி