தொடர் வயிற்றுப்போக்கு, வாந்தியால் 2 பேர் பலியான சம்பவம்; வையாவூரில் சிறப்பு மருத்துவ முகாம்; தூய்மை பணியில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள்

வாலாஜாபாத்: வையாவூரில் தொடர் வயிற்றுப்போக்கு, வாந்தியால் 2 மூதாட்டிகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அதே பகுதியில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொண்ட 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து தெரு குழாய்கள் மூலம், குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் இந்த குடிநீரை குடித்ததில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி அதிகமாக இருந்தது.

அதனால் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வையாவூர் காலனி எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அஸ்வினி (60) என்பவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவர் திடீரென கடந்த 12ம் தேதி உயிரிழந்தார். மேலும் அதே தெருவைச் சேர்ந்த சரோஜா (70) என்பவரும் சிகிச்சை பலனின்றி கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். அடுத்தடுத்து 2 மூதாட்டிகள் இறந்ததால் கிராம மக்களிடையே பதற்றம் அதிகரித்தது.

தகவலறிந்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வையாவூர் ஊராட்சி நிர்வாகிகள் நேற்று முன்தினம் வையாவூருக்கு வருகை தந்து தெருக்களிலும், வீடு வீடாகவும் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் நலம் விசாரித்தனர். பின்னர், பொதுமக்களுக்கு தொற்று நோய் பராவாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, மருந்துகளை வழங்கினர். தண்ணீரைக் காய்ச்சி குடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் அங்குள்ள தெருக்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்தனர்.

விசாரணையில் 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் தண்ணீரை பொதுமக்கள் குடித்ததால்தான் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டதா என்பதை அறிவதற்காக குடிநீரின் மாதிரி எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். தற்போது, வையாவூர் காலனியில் உள்ள சமுதாயக்கூடத்தில் சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 3 படுக்கைகள் அமைத்து, யாராவது நோய் பாதித்தால் அவர்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்க மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் ஏனாத்தூர், உல்லாவூர், கலியனூர், முத்தியால்பேட்டை, ஒழையலூர்மேட்டூர் ஆகிய 5 ஊராட்சிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், வையாவூர் காலனியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து தெருக்களையும் தூய்மை செய்து பிளீச்சிங் பவுடர் தெளித்துள்ளனர். அதே நேரத்தில், வழக்கமாக விநியோகிக்கப்படும் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை.
அதற்கு பதிலாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் இருந்து லாரிகள் மூலம் நேற்று முன்தினம் மாலை முதல் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி