Thursday, June 27, 2024
Home » துயர் துடைக்கும் கிடாத்தலைமேடு துர்கை

துயர் துடைக்கும் கிடாத்தலைமேடு துர்கை

by Kalaivani Saravanan

மகா கும்பாபிஷேக 24-11-2023

துர்காபுரீஸ்வரர்

முன்னொரு காலத்தில், மக்களை கடும் துன்பத்திற்குள்ளாக்கி வந்தான் மகிடன் என்ற அசுரன். பொறுமைக்கே பெயர் போன அன்னை துர்கை, ஒரு கட்டத்தில் அசுரனின் அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாத சூழலில், மகிடனை வதம் செய்கிறாள், துர்கை. அசுரனை கொன்றதால் துர்கைக்கு பாவம் ஏற்படுகிறது. அதனை நிவர்த்தி செய்ய சிவபெருமானை நினைத்து பூஜித்து, தவமிருக்கிறாள், துர்கை. துர்கை அம்மன் பூஜித்ததால் இங்கு `ஸ்ரீதுர்காபுரீஸ்வரராக’ சிவன் அருள்கிறார்.

மேலும், தவத்தின் பலனாக, துர்கையின் பாவத்தை போக்கி, தனது தென்மேற்கில் இடமளித்து, ஆணவத்தின் வடிவமான மகிஷாசுரனுடைய தலைமேல் காலை வைத்து, ஆணவத்தை அடக்கி, துர்கையை வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் தந்திடும் சக்தியை துர்கைக்கு அளித்தார். தரிசித்த உடனேயே எல்லா விதமான பாவங்களையும் போக்கி, ஞானத்தை தந்தருள்வார் நம் துர்காபுரீஸ்வரர்.

காமமான துன்பத்தை போக்கும் ஸ்ரீகாமுகாம்பாள் அம்பிகை

முதலில் அம்பாளை பிரார்த்திக்க வேண்டுமென்று நாம் முன்பே சொன்னோம் அல்லாவா! அப்படி தனது சிவ அபச்சாரத்தை போக்கிக் கொள்ள காமகனாகிய மன்மதன், இத்தலத்தின் அம்பிகையிடம் பிரார்த்தித்து, தவமிருக்கிறான். மன்மதனின் தவத்தால் அம்பிகையானவள் மகிழ்ந்து, தன் கையில் இருந்த கரும்பு வில்லையும், புஷ்ப பானங்களையும் மன்மதனுக்கு கொடுத்து அருள்கிறாள் அம்பிகை. இதனால், எல்லோருடைய காமமான துன்பத்தை போக்குவதால் `காமுகாம்பாள்’ என்ற பெயர் பெற்றார். மேலும், ரதிதேவிக்கு மாங்கல்ய பாக்கியத்தை அளித்தவள் இந்த ஸ்ரீகாமுகாம்பாள் அம்பிகை.

மூக்குத்தி துர்கை

இங்கு எழுந்தருளியுள்ள துர்கைக்கு அழகான மூக்குத்தி ஒன்று அணிவிக்கப்படுகிறது. இந்த மூக்குத்தி அணிவதற்கென்று துர்கை அம்மனின் இடது நாசியில், ஒரு சிறு துவாரம் ஒன்று காணப்படுகிறது. என்ன துவாரமா? என ஆச்சரியமாக இருக்கிறதா! ஆம்.. அதற்கு ஒரு சுவாரஸ்ய கதை ஒன்றும் இருக்கிறது. துர்கையம்மனை பிரதிஷ்டை செய்ய தீர்மானித்து, சிற்பியிடம் ஒரு துர்கை அம்மனின் திருவுருவ சிலை ஒன்றை வடிவமைக்க சொன்னார்கள்.

சிற்பியும் பல மாதங்களாக அரும்பாடுபட்டு அழகான துர்கை சிலையை வடிவமைத்தார். ஒரு நாள் இரவில், சிற்பியின் கனவில் தோன்றிய துர்கை அம்மன், `எனக்கு ஒரு அழகான மூக்குத்தியினை அணிவிக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு சிலையில் நாளை ஒரு திருத்தம் செய்’ என்று அம்பாள் சொன்னதும், திடுக்கிட்ட சிற்பி, `வேலைகள் அனைத்தும் பூர்த்தி ஆகி விட்டதே.. இந்த நேரத்தில் நாசியில் நான் உளியை வைத்தால் சிலை பின்னமாகிவிடாதா?’ என்று நடுக்க குரலில் சிற்பி கேட்டான்.

மெல்லிய சிரிப்புடன்.. `வருந்தாதே.. என் நாசியின் மீது உன் உளியை மட்டும்வை. பிறகு எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி மறைந்தாள். மறுநாள் காலையில், அம்மன் கூறியதை போலவே, அம்மன் சிலையில் இருக்கும் நாசி பகுதியில் உளியை வைத்தான். என்ன அற்புதம்! அடுத்த கணமே தானாகவே அங்கு மிகச் சிறிய ஒரு துவாரம் ஏற்பட்டது. நடந்த எல்லாவற்றையும் ஊர் பெரியோர்களிடம் சிற்பி தெரிவித்தார். அன்று முதல் துர்கை அம்மனுக்கு மூக்குத்தி அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டது.

கிடா ரூபத்தில் காணப்படும் மகிஷனின் தலைமேல் நின்ற கோலத்தில் வடக்குத் திசை நோக்கி அருள்புரிகிறாள். சிம்ம வாகனம் மற்றும் எட்டுக் கரங்களுடன் காட்சி தருகிறாள். இரண்டு கரங்களில் வரத அபய முத்திரை தாங்கியும், ஐந்து கரங்களில் சக்கரம், பாணம், வில், கத்தி, கேடயம் தரித்தும் தரிசனம் அருள்கிறாள். அதே போல், 1996-ல் துர்கை சந்நதியில் `ஸ்ரீ சக்கரபூர்ண மகா மேரு’ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், விழாக் காலங்களில் துர்கை அம்மனின் திருமுகத்தில் வியர்வைத் துளிகள் அரும்புகின்றன. அதே போல், துர்கைக்கு நேர் எதிரே சுமார் 20 அடி உயரத்தில் சூலம் ஒன்றும் உள்ளது. சூலத்தின் அடிபாகம் 20 அடி ஆழம் வரை பூமிக்கு அடியில் செல்கிறது. துர்கை அம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் போதெல்லாம், இந்த சூலத்திற்கும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.

இவை தவிர, ஐந்தடி நீளத்தில் ஒரு சூலமும், ஒரு அடி நீளத்தில் மற்றுமொரு சூலமும் உள்ளன. இதனை ஸ்ரீ சாமுண்டேஸ்வரியின் வடிவமாக பார்க்கப்படுகிறது. எலுமிச்சை பழத்தில் சிறிதளவு தேனை தடவி இந்த சூலத்தில் குத்தி வழிபட்டு வந்தால், ஏவல், பில்லி, சூனியம் விலகும். மேலும், சூலத்திற்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால், கால்நடைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கொடிய நோய்கள் அகன்றுவிடும்.

சுமங்கலியாக அம்பிகையே வந்தாள்

1990-ல், 300 சுமங்கலியை அழைத்து `ஸுவாசனி பூஜை’ நடத்த துர்கை சந்நதியில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், 299 சுமங்கலிகள் மட்டுமே பூஜைக்கு வந்திருந்தனர். மனமுருகி துர்கையிடம் வேண்டிக் கொண்டனர் விழாவின் ஏற்பாட்டாளர். சரியாக பூஜைகளை ஆரம்பிக்கும் முன்பாக, ஒரு வயதான சுமங்கலியாக வந்திருந்து பூஜைகளில் கலந்து கொண்டு, மங்கள பொருட்களை பெற்றுக் கொண்டு, உணவை உண்டு அதன் பின் மறைந்துவிட்டார்.

விழா ஏற்பாட்டாளர்கள் எங்கு தேடியும், அந்த வயதான சுமங்கலியை காணவில்லை. திடீர் என்று ஒரு பக்தைக்கு அருள் வரவே… `அந்த வயதான சுமங்கலி பெண்ணாக வந்தது நான்தான்’ (துர்கை) என்றும், விழா திருப்தியாக இருந்ததாகவும்கூற, அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.

கிடாத்தலைமேடு பெயர் காரணம்

மக்களை கடும் கொடுமைகளை செய்து வந்த மகிஷாசுரனை, சம்ஹாரம் செய்தாள் துர்காதேவி. மகிஷாசுரனின் தலைகொய்த அந்த வேகத்தில் விழுந்த இடமே, கிடாத்தலைமேடு.

தோஷங்களை நிவர்த்தி செய்யும் துர்கை

கன்னி தோஷம், காள தோஷம், நாக தோஷம், திருமண ஸ்தான தோஷம் போன்ற தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்கிறாள் துர்கை அம்மன்.

மகா கும்பாபிஷேகம்

இத்தகைய சக்திவாய்ந்த இந்த ஆலயத்தில், திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, “மகா கும்பாபிஷேக விழா’’ கார்த்திகை மாதம் 8-ஆம் தேதி அதாவது 24.11.2023 வெள்ளிக் கிழமை அன்று மிக சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. மேலும், 21.11.2023 முதல் 23.11.2023 வரை மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பக்த கோடிகள் கலந்து கொண்டு அருளாசியை பெறுங்கள்.

கோயில் அமைவிடம்:

குத்தாலத்தில் இருந்து 8.கி.மீ., தூரத்திலும், திருமணஞ்சேரியில் இருந்து 3.கி.மீ., தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16. கி.மீ., தொலைவிலும் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது.

தொகுப்பு: ரா.ரெங்கராஜன்

You may also like

Leave a Comment

2 + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi