தினகரன்- சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சி: 2வது நாளாக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

சென்னை: தினகரன்- சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது. 2வது நாளான இன்று ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை கல்வி என்பது மாணவர்களை மதிப்பெண் எடுக்க வைப்பது என்ற அளவில்தான் உள்ளது. எனவே பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்கள், தங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய படிப்பை தேர்வு செய்வது என்பது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோருக்கும் சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. அந்த சவாலை எதிர்கொண்டு, தங்கள் வீட்டு செல்லங்களை எந்த பாடப்பிரிவில் சேர்க்கலாம் என்கிற கவலையை தீர்க்கும் அருமருந்தாக தினகரன் நாளிதழ் சார்பில் பிளஸ் 2 முடித்தவர்களுக்காக நடத்தப்படும் மாபெரும் கல்வி கண்காட்சி மாணவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.

ஆண்டுதோறும் நடத்தக்கூடிய தினகரன் கல்வி கண்காட்சியை, இந்த ஆண்டும் தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இந்த பிரமாண்ட கல்வி கண்காட்சி தொடக்க விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர் ரமேஷ் முன்னிலையில், உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சென்னை விஐடி சார்பு துணை வேந்தர் தியாகராஜன், ரெமோ கல்லூரி இயக்குநர் ரித்திக் பாலாஜி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டனர்.

இந்த கண்காட்சியில் பொறியியல், மருத்துவம், விமான தொழில்நுட்பம், மீடியா கல்வி, அனிமேஷன், அயல்நாட்டு கல்வி, கலை அறிவியல், நர்சிங், ஊடகம், ஓட்டல் மேலாண்மை, கட்டிட கலை, புகைப்பட கல்வி, வர்த்தக கல்வி, கடல்சார் கல்வி, அழகு கலை, தீ மற்றும் பாதுகாப்பு, காலணி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் குறித்த நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் அரங்குகள் இடம் பெற்றிருந்தன. நேற்று காலை முதலே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள், தங்களது பெற்றோருடன் குவிந்தனர். ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்வு செய்தனர்.

2வது நாளான இன்று கண்காட்சி களைகட்டியது. இன்று விடுமுறை என்பதால் ஏராளமான மாணவ- மாணவிகள், தங்களது தோழிகள் மற்றும் நண்பர்கள், பெற்றோருடன் வந்திருந்தனர். அவர்கள், ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டு, தாங்கள் தேர்வு செய்யப்பட உள்ள பாடப்பிரிவுகள் பற்றிய சந்தேகங்கள் மற்றும் கல்லூரிகளை கல்வியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். அந்தந்த கல்வி நிறுவனங்கள் சார்பில் பணியமர்த்தப்பட்டிருந்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் போன்றவர்கள் மாணவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தனர். விடுமுறை என்பதால் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் குவிந்தனர். இன்று மாலையுடன் கண்காட்சி நிறைவு பெறுகிறது.

Related posts

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்