தர்மயுத்தம் மகனுக்கு சீட் தந்தா நடக்கிறதே வேற என தாமரை நிர்வாகிகள் எச்சரிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஹனிபி மாவட்டத்தை இப்பவெல்லாம் சுத்தி சுத்தி வராராமே யாருன்னு தெரியுமா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தெரியும்.. கடந்த முறை எம்பி தேர்தல் நடந்த போது தமிழ்நாட்டில் இலை கட்சி ஹனிபி தொகுதியில் மட்டும் ஜெயித்தது. மோடி தயவால் எப்படியும் மந்திரி ஆகிடலாம்னு கனவு கண்ட தர்மயுத்த நாயகர் அவரோட மகனை மட்டும் பல கோடி செலவிட்டு ஹனிபி தொகுதியில் வெற்றி பெற வச்சாரு. இலைக் கட்சிக்குள்ள இருந்த உட்கட்சி தகராறு காரணமா மந்திரி வாய்ப்பு வந்தும் அதுக்கு இடையூறாக சேலத்துக்காரர் தரப்பு இருந்தது. இதனால் கடந்த அஞ்சு வருஷமா மந்திரி பதவி கிடைக்கும் என்று இலவு காத்த கிளியாக தர்மயுத்த நாயகர் காத்திருந்தும் பலனில்லை.

மோடி தரப்பை தனக்கு சாதகமாக்குவதற்காக தொகுதி பக்கம் கூட வராம எப்பவுமே தலைநகரிலேயே தாமரை தலைவர்களை மகனானவர் சுத்தி சுத்தி வந்தார். தொகுதி மக்கள் நேர்ல குறைகள் சொல்லணும்னு நினைச்சா கூட எம்பிய பார்க்கிறது பெரிய விஷயமா இருந்துச்சு. இந்தப் புலம்பல் தொகுதி முழுக்க அஞ்சு வருஷமா நீடித்தது. இப்போ நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்குது. இலைக் கட்சி தங்களை விட்டு ரொம்ப தூரம் போயிட்டாலும் தாமரை தயவோட போட்டியிட தர்மயுத்த நாயகரும், அவர் மகனும் முடிவு செஞ்சிருக்காங்க.

இதனால அஞ்சு வருஷமா தொகுதி மக்களைத் தேடி போகாத தர்மயுத்த நாயகரோட மகனானவர், கடந்த ஒரு மாதமா ஹனிபி தொகுதிக்குள்ள நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் எல்லாம் ‘வாலண்ட்ரியா’ கலந்துக்கறதும், பொதுமக்கள்கிட்ட குறைகள் கேட்கிறதும் அரசு பணிகளை ஆய்வு செய்வதுமாக படம் காமிச்சுக்கிட்டு இருக்காராம். அஞ்சு வருஷம் தொகுதியை எட்டிப் பார்க்காமல் இருந்துட்டு மறுபடியும் தாமர தயவுல நிக்க நெனச்சி இருக்காரு. ஆனா மக்கள் வெறுப்புக்கு ஆளான இவரை ஹனிபி தொகுதியில் நிறுத்தினால் தாமரைக்கு மக்கள் எல்லாம் சேர்ந்து தண்ணி காட்டிடுவாங்களேன்னு தாமரை கட்சி தொண்டர்கள் புலம்பிக்கிட்டு இருக்காங்க.

அவருக்கு சீட் தந்தா நடக்கிறதே வேற என எச்சரிக்கையும் விடுக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நல்லி எலும்பை கடிக்க வச்சி பெயர் வாங்கிய மாங்கனி ஜெயில் ஆபீசர் பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துல சென்டிரல் ஜெயில் ஒண்ணு இருக்குது. இங்கிருக்கும் உயரதிகாரிக்கும், சகாக்களுக்கும் ஒரு உரசல் இருந்துக்கிட்டே இருந்துச்சி. நாளாக நாளாக உயரதிகாரிக்குதான் பிரஷர் ஏறிச்சே தவிர வேறு யாரும் எதையும் கண்டுக்கலியாம். இந்த விரிசலை சரி செய்ய பெரும் திட்டத்தை போட்டாரு அந்த அதிகாரி. இந்நேரத்தில் தான் சிறை வளாகத்தில் உள்ள முனியப்பன் கோயில் திருவிழா வந்தது. விழாவை முன்னின்று அந்த அதிகாரிதான் நடத்தினாரு.

வார்டன்களுக்கான கிரிக்கெட் போட்டியை தொடங்கி வச்சதோடு மட்டுமல்லாமல் சொந்த பணத்தில் இருந்து பெரும் தொகையை பரிசாவும் அறிவிச்சாரு. இதனால சிறை வார்டன்கள் அவரிடம் ரொம்பவே நெருங்கி வந்தாங்களாம். கோயிலில் நடந்த விளையாட்டு போட்டியில் அவரே வர்ணனையாளராகவும் இருந்தாரு. இவரது வார்த்தை ஜாலத்தை பார்த்த வார்டன்கள் மற்றும் அவர்களோட குடும்பத்தினரும் ரொம்ப நல்லவராக இருக்காரேன்னு சந்தோசப்பட்டாங்களாம். உச்சகட்டமாக எல்ேலாரையும் நல்லி எலும்பை கடிக்க வச்சி நல்லபெயரு வாங்கிட்டாராம். கோயில் விழா செலவுக்கு நன்கொடை வசூலிச்ச பணத்தில் பெரும் தொகை மீதியாகியிருக்கு. இதனை இந்து சமய அறநிலையத்துறைக்குத்தான் ஒப்படைக்கணும்.

இதனால வார்டன்களின் மனசில் நிரந்தர இடம்பிடிக்க முடியாதுன்னு திட்டமிட்ட அந்த அதிகாரி, 3 ஆடு, 50 கிலோ சிக்கனை வாங்கி கமகமக்கும் விருந்து படைச்சிட்டாராம். சிறைப்பணியாளர்கள் குடும்பத்தோடு வந்து விருந்துல கலந்து கிட்டாங்களாம். இதனால இப்போ சிறையில அவருக்கு நல்ல பெயர் வந்திருக்காம். இந்த பெயரை நிலைக்க வச்சிட்டாருன்னா நல்லா இருக்குமுன்னு வார்டன்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேர்தல் சம்பந்தமான ஆலோசனை நடத்தாத தேனிக்காரர் மீது கடும் அதிருப்தியில் நிர்வாகிகள் இருப்பதா சொல்றாங்களே..’’

‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தில் இலை கட்சி தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக்கூட்டம் தேனிக்காரர் அணி சார்பில் நடந்தது. இதில், டெல்டாவில் உள்ள மாஜி அமைச்சர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரிய அளவில் கூட்டம் வரும் என தேனிக்காரர் எதிர்பார்த்து இருந்தாராம்… ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை. இதனால் கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே நெற்களஞ்சியத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் கடிந்து கொண்ட தேனிக்காரர், கூட்டம் முடியும் வரையிலும் இருக்க முகத்துடனே இருந்துள்ளார்.

கூட்டம் முடிந்ததும் தேனிக்காரர், தேர்தல் சம்பந்தமான முக்கிய ஆலோசனையை நிர்வாகிகளிடம் வழங்குவார் என நிர்வாகிகள் காத்திருந்தனர். ஆனால் கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகளை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தாமல் தேனிக்காரர் சென்று விட்டார். இதனால் நிர்வாகிகள் தேனிக்காரர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பூட்டு மாவட்டத்துக்காரர் தேனிக்காரரை மண் குதிரை என்று வசை பாடினாராமே…’’ ‘‘நெல்லையில் இலை கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் இலை கட்சியின் பொருளாளர் பூட்டு மாவட்டத்துக்காரர் தான் பேச்சாளர்.

மம்மி இருந்த போது தேனிக்காரரும் இந்தப் பதவியில் தான் இருந்தார். அப்போது தேனிக்காரரை பார்த்து கும்பிடு போட்டவர் பூட்டு மாவட்டத்துக் காரர். மம்மி மறைவுக்கு பிறகு சேலம் காரரின் கை ஓங்கி விட்டதால், தேனிக்காரர் அவுட்டாகி விட்டார். அந்த தோரணையில் தான் பூட்டு மாவட்டத்துக்காரர் தேனிக்காரரை வாய்க்கு வந்த படி போட்டு தாக்கினாராம்.

கூட்டத்தில் பேசிய அவர் தேனிக்காரரை, மூழ்கும் கப்பல், மண் குதிரை என்று கூறியதுடன் அவரை நம்பி தொண்டர்கள் ஆற்றில் இறங்க மாட்டார்கள். அவரிடம் இருப்பவர்கள் மறுபரிசீலனை செய்யுங்கள் எனவும் தேனிக்காரரின் ஆதரவாளர்களுக்கு நேரடி அழைப்பு விடுத்தாராம். அவரது பேச்சிற்கு இலை கட்சியின் தொண்டர்கள் கை தட்டினாலும், கூடியிருந்தவர்கள் ரசிக்கவில்லையாம். மக்களவை தேர்தலுக்கு பின்னர் பாருங்கள் யார் கை ஓங்கும் என்பது தெரியும் என்கின்றனர் தேனிக்காரரின் ஆதரவாளர்கள்’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை