தர்மபுரியில் இருந்து சென்னைக்கு 100 டன் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

*மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

தர்மபுரி : தர்மபுரியில் இருந்து சென்னைக்கு கடந்த 6ம் தேதியில் இருந்து நேற்று வரை அரிசி, மளிகை உணவு பொருட்கள், துணிகள் உள்பட 100 டன் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3,4ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் தண்ணீரில் தத்தளித்தனர். கார் உள்ளிட்ட உடமைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார். வெள்ள நிவாரண பணிகளுக்கு தோள் கொடுக்குமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன.

தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம், ஊரகத்துறை, ஓய்வு பெற்றோர் ஊரகத்துறையினர், தனியார் கல்வி நிறுவனங்கள், ரோட்டரி சங்கம், மை தர்மபுரி உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகள் கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து வெள்ள நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இறுதியாக நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சென்னைக்கு வெள்ள நிவாரண பொருட்கள் சென்றது. கடந்த 7 நாட்களில் 12 லாரிகளில் ₹1 கோடி மதிப்பிலான 100 டன் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், துணி வகைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உணவு மற்றும் மளிகை பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை, ரவை, சேமியா, பிஸ்கட், குடிநீர் பாட்டில், பிரட், பால்பவுடர், சமையல் எண்ணெய், கடுகு, சீரகம், மசாலா பவுடர் பாக்கெட்டுகள், உப்பு, புளி, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, நாப்கின்ஸ், சேம்பு, சோப்பு, டூத் பேஸ்ட் மற்றும் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சேலை, துண்டு, போர்வை, பாய் உள்ளிட்டவையும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கூறுகையில், சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் மிக்ஜாம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணபொருட்களை பொதுமக்கள் வழங்கலாம் என மாவட்ட நிர்வாகத்தால் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று ஏராளமான பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், தனியார் கல்வி நிறுவனங்கள் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கினர்.

கடந்த 6ம்தேதி முதல் நேற்று வரை கடந்த 7 நாட்களாக தர்மபுரியில் இருந்து சென்னைக்கு தொடர்ந்து வெள்ள நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தால் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 12 லாரிகளில் சுமார் ₹1 கோடி மதிப்பிலான 100 டன் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், துணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காசோலையாக ₹1 லட்சம் பொதுமக்கள் வழங்கினர். இறுதியாக நேற்று ஒரு லாரியில் தர்மபுரி மாவட்ட வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.

*தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகள் கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து வெள்ள நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

*கடந்த 7 நாட்களில் 12 லாரிகளில் ₹1 கோடி மதிப்பிலான 100 டன் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், துணி வகைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

*அரிசி, பருப்பு, சர்க்கரை, ரவை, சேமியா, பிஸ்கட், குடிநீர் பாட்டில், பிரட், பால்பவுடர், சமையல் எண்ணெய், கடுகு, சீரகம், மசாலா பவுடர் பாக்கெட்டுகள், உப்பு, புளி, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, நாப்கின்ஸ், சேம்பு, சோப்பு, டூத் பேஸ்ட் மற்றும் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு