தனுஷ்கோடிக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தலைமன்னார் துறைமுகத்தில் இலங்கை அமைச்சர் ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி – ராமேஸ்வரத்திற்கு கப்பல் போக்குவரத்தை மீண்டும் துவக்குவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஒன்றிய அரசு தரப்பிலும், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை துவக்குவதற்கு பரிசீலனை நடந்து வருகிறது. இந்நிலையில், தலைமன்னாரில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவக்குவது தொடர்பாக இலங்கையின் துறைமுகங்கள் – கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தலைமன்னார் துறைமுகத்தை ஆய்வு செய்தார்.

அங்கு ஏற்கனவே கப்பல் போக்குவரத்து நடந்த பழைய துறைமுக பாலம், அதனை சார்ந்த கட்டுமானங்கள் இருந்த பகுதிகளை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். பின்னர் தலைமன்னார் கடற்படை முகாம் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கப்பல் போக்குவரத்து துவங்குவதற்கு துறைமுகத்தை சீரமைத்து உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்து பேசப்பட்டது. தலைமன்னார் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான முதற்கட்ட பணிகளை விரைந்து செயல்படுத்துவது.

நீண்ட காலத்திற்கான நிரந்தர உள்கட்டமைப்புகளை உருவாக்குவது என இரண்டு விதமான திட்டங்களை செயல்படுத்திட முடிவு செய்யப்பட்டது. முதற்கட்ட பணியை முடித்து குறுகிய காலத்தில் தலைமன்னார் – ராமேஸ்வரம் இடையே கப்பல் சேவையை துவங்கி இலங்கை – இந்தியா இடையே பயணிகள் சென்று வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், இலங்கை அமைச்சர் காதர் மஸ்தான் வன்னி, எம்பிக்கள் சான்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கக்கொடி மரம் சேதம்: தேவஸ்தான நிர்வாகம் அதிர்ச்சி

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ.63,246 கோடி ஒதுக்கியதாக பாஜகவினர் பொய்

அமேதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரக் கொலை செய்த மர்ம நபர்கள்: குடும்பத்தினருக்கு தொலைபேசியில் ராகுல் காந்தி ஆறுதல்