தாழம்பூர் ஸ்மார்ட் சிட்டி நில விவகாரம் காசா கிராண்ட் அலுவலகத்தில் குடியிருப்புவாசிகள் முற்றுகை: திருவான்மியூரில் பரபரப்பு

சென்னை: சென்னை அருகேயுள்ள காசா கிராண்ட் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் நேற்று திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அடுத்த தாழம்பூர் அருகே 5 ஏக்கர் பரப்பில் காசா கிராண்ட் ஸ்மார்ட் சிட்டி அமைந்துள்ளது. 2017ம் ஆண்டு இதன் கட்டுமானம் தொடங்கிய நிலையில், 2020ம் ஆண்டு குடியிருப்பு கட்டப்பட்ட இடம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அறக்கட்டளைக்காக ஒதுக்கப்பட்ட அனாதீன நிலம் என்பது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ரூ.30 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை கொடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் பிளாட்டுகளை வாங்கி விட்டனர். இந்நிலையில், நிலம் தொடர்பாக முந்தைய உரிமையாளர்கள் தரப்பிலும் காசா கிராண்ட் தரப்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. குடியிருப்புவாசிகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க வந்து ஒரு வருட காலத்திற்கும் மேல் மின்சாரம் வழங்கப்படவில்லை. மேலும், அரசுக்கு வரி செலுத்த முடியாத நிலை இருந்தது.

தொடர்ந்து, முதல் ஒரு வருடம் ஜெனரேட்டர் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி, மின்சாரம் கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கு தற்போதும் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையின் சார்பாக காசா கிராண்ட் ஸ்மார்ட் சிட்டி இருக்கும் குறிப்பிட்ட இடம் அனாதீனம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கில் பணம் செலுத்தி குடியிருப்பு வாங்கியவர்கள் 100க்கும் மேற்பட்டோர் திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காசா கிராண்ட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் குடியிருப்புவாசிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திரும்ப பணம் அல்லது மாற்று இடம் தருவதாக உறுதி அளித்ததால் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

 

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு