அடுத்த பிறவியிலும் காவல்துறையில் பணியாற்ற விரும்புகிறேன்: ஓய்வு பெற்ற டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் கண்ணீர்மல்க பேச்சு


சென்னை: அடுத்த பிறவியிலும் நான் காவல்துறையிலேயே பணியாற்ற அந்த இறைவன் எனக்கு வரம் கொடுக்க வேண்டும் என்று டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் பணி ஓய்வு பெற்ற நாளில் கண்ணீர் மல்க உருக்கமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து காவல்துறை சார்பில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசரிப்பு விழா நடந்தது. இந்த விழாவுக்கு வந்த டிஜிபி ஏ.கே.விஸ்வநாதனை காவல்துறை பேன்ட் வாத்தியங்கள் முழங்க சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா மேடைக்கு வந்த ஏ.கே.விஸ்வநாதனுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் மற்றும் சென்னை பெருநகர் காவல்துறை கமிஷனர் அருண் வரவேற்றனர்.

அதேபோல் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆவடி கமிஷனர் சங்கர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தமிழ்நாடு காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை டிஜிபி ஏ.ேக.விஸ்வநாதன் ஏற்றுக்கொண்டார். அதைதொடர்ந்து ஓய்வுபெற்ற டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் பிரிவு உபசார நிகழ்ச்சியில் பேசியதாவது: என்னுடைய தாத்தா பெருமாள் காவலராக பணியில் சேர்ந்து தலைமை காவலராக பதவி உயர்வு பெற்றார். என்னுடைய தந்தையார் அய்யாசாமி உதவி ஆய்வளராக பணியில் சேர்ந்த கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். மூன்றாவது தலைமுறையாக நான் இந்திய காவல் பணியில் ேசர்ந்து பணி நிறைவு செய்வதை பெருமையாக கருதுகிறேன். 34 ஆண்டுகளாக எனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து வந்துள்ளேன்.

நான் பணிபுரிந்த பெரும்பாலான இடங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி உள்ளேன். என்னுடைய கடினமான சூழ்நிலைகளில் தோளோடு தோளாக நின்ற சக அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்ததை பெருமையாக கருதுகிறேன். இன்று தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கை காப்பத்திலும், குற்றங்களை தடுப்பதிலும் இந்தியாவிலேயே சிறந்த விளங்குவதற்கு அவர்களுடைய கடுமையான உழைப்பே காரணம். இன்று நான் கடைசியாக இந்த காக்கி சட்டையை அணிந்தபோது என் கண்கள் கலங்கின. அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், அதிலும் நான் காவல்துறையிலேயே பணி புரியும் வாய்ப்பை இறைவன் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்