சித்திரை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் பக்தர்கள் தரிசனம்

*மழையால் குறைந்த அளவே வருகை

வத்திராயிருப்பு : சதுரகிரியில் மழை பெய்ததால் சித்திரை மாத பிரதோசத்தை முன்னிட்டு நேற்று குறைந்த அளவே பக்தர்கள் வருகை தந்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிரதோஷ தினமான நேற்று மிக குறைந்த அளவிலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. எனவே சதுரகிரி மலையில் மழை பெய்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் மிக குறைந்த அளவே பக்தர்கள் வருகை தந்தனர். காலை 7.05 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சாமி அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.

நேற்று மதியம் 2.45 மணியளவில் சதுரகிரி மலையில் அரைமணி நேரம் சாரல் மழை பெய்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மலைப்பாதைகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். சாரல் மழையாக இருந்ததால் ஓடையில் தண்ணீர் வரத்து மிகமிக குறைந்த அளவே இருந்தது. இதனால் பக்தர்கள் இடையூறின்றி கோயிலுக்கு சென்று விரைந்து கீழே இறங்கி வந்தனர்.

6ம் தேதியுடன் பக்தர்கள் அனுமதி நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related posts

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு